சென்னை : வெற்றி மாறனின் விடுதலை படத்தில் கதாநாயகனாக நடித்த நடிகர் சூரி இன்று இளையராஜாவை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.
எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகி உள்ள விடுதலை முதல் பாகத்தில், நடிகர் சூரி,மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, கௌதம் மேனன், ராஜிவ் மேனன், பவானி ஸ்ரீ ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார் இப்படத்தின் பின்னணி இசை, பாடல் என அனைத்திற்கும் ரசிகர்களிடம் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது.
இயக்குநர் வெற்றிமாறன்
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நகைச்சுவை நடிகர் சூரி முதன்முதலாக ஹீரோவாக நடித்த விடுதலை திரைப்படம் வெள்ளிக்கிழமை அன்று திரையரங்கில் வெளியானது. இப்படத்திற்காக நடிகர் கடுமையாக உழைத்து ஒட்டுமொத்த உழைப்பையும் கொடுத்து இருக்கிறார். படத்தில் கான்ஸ்டெபிள் குமரேசனாக நடித்துள்ள சூரி,பல சண்டை காட்சிகளில் டூப்பே இல்லாமல் நடித்திருக்கிறார்.

சிறந்த அனுபவம்
இந்தப் படத்தை சினிமா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். விடுதலை படம் மட்டுமல்ல அனைவருக்கும் சிறந்த அனுபவம் என்று படம் பார்த்தவர்கள் படத்தை வெகுவாக புகழ்ந்து வருகின்றனர். காவல் நிலையத்தில் போலீசின் டார்ச்சர்கள் பற்றி பல படங்களில் நாம் பார்த்து இருக்கிறோம்.அந்த வரிசையில் விடுதலை படத்தின் காட்சிகள் இருந்தாலும், இப்படியும் போலீஸ் இருப்பார்களா என நம்மை யோசிக்க வைத்துள்ளது.

சீட்டின் நுனியில்
மொத்தத்தில் இந்த படம் ரசிகர்களை சீட்டின் நுனியில் உட்கார வைத்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். இரண்டு மணி நேரமும் எங்கே இருக்கிறோம் என்பதை மறந்து படத்தைப் பார்க்கும் அளவுக்கு கதை மிகவும் உணர்வு பூர்வமாக இருந்தது. இந்த படத்திற்கு இளையராஜாவின் இசை கூடுதல் பலமாக இருந்தது, அருட்பெரும்ஜோதி, தனுஷ் பாடிய ஒன்னோடு நடந்தால் பாடல், காட்டு மல்லி பாடல் கூடுதல் சிறப்பை ஏற்படுத்தி உள்ளது.

“இசை”யை சந்தித்து நன்றி கூறினேன்
இந்நிலையில், நடிகர் சூரி இன்று இசைஞானி இளையராஜாவை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். இந்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்த சூரி ட்விட்டர் பக்கத்தில், சற்று நேரம் முன்பு..”இசை”யை சந்தித்து நன்றி கூறினேன்..ஆசி வாங்கினேன்..இறைவனுக்கு நன்றி!” எனப் பதிவிட்டுள்ளார். எப்போதுமே வெற்றிமாறன் திரைக்கதையில் தோற்றதில்லை, அதற்கு மற்றொரு எடுத்துக்காட்டாக விடுதலை திரைப்படம் மகத்தான வெற்றியை பெற்றுள்ளது.