சென்னை : பிரபல வில்லன் நடிகர் கிருஷ்ணா வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார்.
காஸ்ட்யூம் டிசைனர் ஆன கிருஷ்ணா பல முன்னணி நடிகர்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக இருந்துள்ளார்.
கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்துள்ள காஸ்ட்யூம்ஸ் கிருஷ்ணா 1991 ஆண்டு ‘பாரத் பந்த்’ திரைப்படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானார்.
வில்லன் நடிகர் காஸ்ட்யூம்ஸ் கிருஷ்ணா
வில்லன் நடிகர் கிருஷ்ணா ஆந்திர மாநிலத்தில் உள்ள லக்கவரபு கோட்டா கிராமத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் மாதாசு கிருஷ்ணாவாகும். சினிமாவிற்காக காஸ்ட்யூம்ஸ் கிருஷ்ணா என தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். இவர், உதவி ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றுவதற்காக 1954ம்ஆண்டு சென்னைக்கு வந்தார். குறுகிய காலத்திலேயே திறமையான ஆடை வடிவமைப்பாளர் என பெயர் எடுத்ததால், ராமாநாயுடுவின் ஸ்டுடியோவில் முழுநேர ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றினார்.

முன்னணி நடிகர்களுக்கு
அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட இவர் மூத்த நடிகர் என்டிஆர், நாகேஸ்வர ராவ், சிரஞ்சீவி, வாணி ஸ்ரீ, ஜெயசுதா, ஜெயப்பிரதா மற்றும் ஸ்ரீதேவி போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஆடை வடிமைப்பாளராக இருந்து உள்ளார். ஒவ்வொரு முறையும் ஒரு நட்சத்திரத்திற்கான ஆடையை வடிவமைக்கும்போது அந்த ஆடை மிகப்பெரிய அளவில் டிரெண்டாகிவிடும். அந்த அளவுக்கு தனது வேலையின் மீது ஆர்வத்துடன் இருந்தார்.

100க்கும் மேற்பட்ட படங்களில்
1991ம் ஆண்டு பாரத் பந்த் திரைப்படத்தின் மூலம் வில்லன் நடிகராக முகத்தை திரையில் காட்டி பிரபலமானார். பெல்லாம் செபிடே வினலி, போலீஸ் லாக்கப், அல்லரி மொகுடு, வில்லன், புட்டிண்டிக்கி ரா செல்லி போன்ற படங்களில் குணச்சித்திர நடிகராக வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து பெயர் எடுத்த காஸ்ட்யூம்ஸ் கிருஷ்ணா சுமார் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் சூர்யா ஜோதிகா நடித்த சில்லுனு ஒரு காதல் படத்தில் பூமிகாவின் அப்பாவாக நடித்திருப்பார்.

காலமானார்
இந்நிலையில் வில்லன் நடிகரான காஸ்ட்யூம்ஸ் கிருஷ்ணா வயது மூப்பு காரணமாக நேற்று உயிரிழந்தார். கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், சென்னையில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவருக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். அவரது மறைவு செய்தி ஒட்டு மொத்த தெலுங்கு திரையுலகையும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. பல நடிகர்கள் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்கள் சமூக ஊடகங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.