சென்னை: Viduthalai Making Video (விடுதலை மேக்கிங் வீடியோ) வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் விடுதலை படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்தியாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன் கடைசியாக அசுரன் படத்தை இயக்கினார். அந்தப் படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. மேலும் அந்தப் படத்தின் மூலம் வெற்றிமாறன் அடுத்தக்கட்டத்துக்கு நகர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றிமாறனின் விடுதலை
நடிகர் விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்டோரை வைத்து விடுதலை படத்தை உருவாக்கியிருக்கிறார் வெற்றிமாறன். மக்கள் படை குறித்தும், இன விடுதலை குறித்தும் படத்தில் பேசப்பட்டிருக்கிறது. இப்படம் மொத்தம் இரண்டு பாகங்களாக உருவாகியிருக்கிறது. இதன் முதல் பாகம் மார்ச் 31ஆம் தேதி ரிலீஸானது. வெற்றிமாறனின் படம் என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் படம் வெளியானது.
படத்துக்கு கிடைத்திருக்கும் செம ரெஸ்பான்ஸ்
தனது படைப்புகள் மூலம் ஆரோக்கியமான உரையாடலை சமூகத்தில் கிளப்புபவர் வெற்றிமாறன். வெக்கை நாவலில் இருந்து அசுரன் உருவானாலும் அந்தப் படத்தின் மூலம் பஞ்சமி நிலம் குறித்த உரையாடலை தொடங்கிவைத்தார். அதேபோல்தான் விடுதலை படத்தின் மூலம் காவல் துறையின் கோர முகத்தை விசாரணைக்கு பிறகு இன்னொருமுறை வெளிச்சப்படுத்தியிருக்கிறார் வெற்றி என்ற கருத்து எழுந்திருக்கிறது.
சூரிக்கு விடுதலை ஒரு அடையாளம்
ஒன்றிரண்டு படங்கள் ஹிட்டாகவிட்டாலே பெரிய ஹீரோக்களை வைத்து படம் இயக்க ஆசைப்படும் இயக்குநர்கள் மத்தியில் வெற்றிமாறன் தனித்துவமானவர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். நகைச்சுவை நடிகராக வலம் வந்த சூரியை இந்தப் படத்தின் மூலமாக கதையின் நாயகனாக அறிமுகப்படுத்தியிருக்கிறார். அதற்கு நியாயம் செய்யும் விதமாக சூரியும் குமரேசன் என்ற கதாபாத்திரத்தில் அட்டகாசமாக நடித்திருக்கிறார். நடிப்போடு மட்டுமின்றி ஆக்ஷன் காட்சிகளிலும் மிகப்பெரிய ரிஸ்க்கை அவர் எடுத்திருக்கிறார். இதனையடுத்து அவரது நடிப்பை பார்த்த ரசிகர்கள் நிச்சயம் இந்தப் படம் சூரிக்கும் மிகப்பெரிய அடையாளமாக மாறும் என புகழ்ந்துவருகின்றனர்.
இளையராஜாவின் இசை
ஜிவி பிரகாஷ் மற்றும் சந்தோஷ் நாராயணனுடன் கூட்டணி வைத்த வெற்றிமாறன் விடுதலையில் முதல்முறையாக இளையராஜாவுடன் கூட்டணி வைத்திருக்கிறார். படத்தின் பல இடங்களில் இளையராஜாவின் இசை மெய் சிலிர்க்க வைப்பதாகவும், படத்தின் பாடல்களும் தாலாட்டும் உணர்வை கொடுப்பதாகவும் ரசிகர்கள் தெரிவித்துவருகின்றனர். அதுமட்டுமின்றி வெற்றிமாறன் இளையராஜாவுடன் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் எனவும் ரசிகர்கள் கூறுகின்றனர்.
மேக்கிங் வீடியோவை வெளியிட்ட படக்குழு
இந்நிலையில் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது. மொத்தம் 2 நிமிடங்கள் மூன்று நொடிகள் ஓடும் அந்த மேக்கிங் வீடியோவில் படத்தில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட ரயில் விபத்து, அந்த ரயில் செட் எப்படி உருவாக்கப்பட்டது போன்ற பல காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. இதனைப் பார்த்த ரசிகர்கள் படக்குழுவினர் அட்டகாசமாக உழைத்திருக்கின்றனர். அதன் பலனாகத்தான் படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது என புகழ்ந்துவருகின்றனர்.