சென்னை: Viduthalai (விடுதலை) விடுதலை படத்தின் காட்சிகள் சோளகர் தொட்டி நாவலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதாக எழுத்தாளர் இரா.முருகவேள் தெரிவித்திருக்கிறார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் விடுதலை. சூரி, விஜய் சேதுபதி, பவான் ஸ்ரீ, கௌதம் மேனன், ராஜீவ் மேனன் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படம் கடந்த 31ஆம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சூரியின் நடிப்பு ரசிகர்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.
சோளகர் தொட்டி நாவலா விடுதலை காட்சிகள்?
படம் அரசியல் ரீதியாகவும், மேக்கிங் ரீதியாகவும் பாராட்டை பெற்றாலும் படத்தின் இரண்டாம் பாதி காட்சிகள் பல தோழர் பாலமுருகன் எழுதிய சோளகர் தொட்டி நாவலில் வருபவை போன்றே இருப்பதாகவும்,; அதற்கான க்ரெடிட்டை எதற்காக வெற்றிமாறன் பாலமுருகனுக்கு கொடுக்கவில்லை எனவும் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துவருகின்றனர்.

எழுத்தாளர் முருகவேள் பதிவு
இந்நிலையில் எரியும் பனிக்காடு புத்தகத்தை எழுதிய இரா. முருகவேள் விடுதலை படத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில், ” விடுதலை படத்தில் வரும் ஒர்க் ஷாப் காட்சிகள் அனைத்தும் சோளகர் தொட்டி நாவலில் இருந்து எடுக்கப் பட்டுள்ளன. நாவலின் ஆசிரியரின் அனுமதி பெறப்படவில்லை. இது அப்பட்டமான கதைத் திருட்டு ஆகும்.

சம்பந்தமே இல்லாத காட்சிகள்
தேவாரம் தலைமையிலான நக்சல் ஒழிப்பு ஆபரேஷன் அஜந்தா நடந்தது தர்மபுரி மாவட்டத்தில். 1980 ஆம் ஆண்டு. தமிழ்நாடு விடுதலை படை நடத்திய அரியலூர் ரயில் பாலம் குண்டு வெடிப்பு நடந்தது 87இல் என்று நினைக்கிறேன். கொஞ்சம் முன்னே பின்னே இருக்கலாம். ஈரோடு மாவட்டம் மாதேஸ்வரன் மலையில் ஒர்க் ஷாப் என்று அழைக்கப்பட்ட கட்டடத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டது 93 to 95, 96 வீரப்பன் வேட்டையின் போது. இந்த மூன்றுக்கும் சம்பந்தமே இல்லை. சொல்லப்போனால் மக்கள் யுத்தக் கட்சியும், தமிழ்நாடு விடுதலைப் படையும் தங்கள் நூற்றுக்கணக்கான ஊழியர்களுடன் காட்டிற்குள் பின்வாங்கி இருந்தால் இவ்வளவு இழப்புகள் ஏற்பட்டிருக்காது. பின்பு சில பத்து பேராக விடுதலைப் படை சுருங்கிய பின்பே வீரப்பனின் சேர்ந்தார்கள். அதுவும் குறுகிய காலம் மட்டுமே.

இயக்குநரின் முதிர்ச்சி இன்மையையே காட்டுகிறது.
மூன்று வெவ்வேறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளை கலந்து குழப்பி திரித்து படம் எடுக்க யாருக்கும் உரிமை இல்லை. இது இயக்குனரின் முதிர்ச்சி இன்மையை காட்டுகிறது. Cordon and search operation என்று சொல்லப்படும் சுற்றி வளைத்து நடத்தப்படும் தேடுதல் நடவடிக்கை பற்றிய அடிப்படை புரிதலே இல்லாமல் சூரி விஜய் சேதுபதியை பிடிக்கும் சண்டைக் காட்சி எடுக்கப் பட்டுள்ளது. அபத்தத்திலும் அபத்தம். வழக்கமான தமிழ் சினிமா சண்டை.

சூரி செய்வது நல்ல காமெடி காட்சி
இதில் சூரி துப்பாக்கியை எடுக்கும் காட்சி enemy at the gates சாயலில் வேறு. அதுவே ஒரு டப்பா படம். மக்கள் யுத்தக் கட்சியில் .303 ரைபில் பொக்கிஷம் போல. அந்தப் பகுதி மக்களிடம் இருந்த இரட்டை குழல் துப்பாக்கி, தப்பஞ்சர் துப்பாக்கிகள்தான் தோழர்களிடம் இருந்தன. பெரும்பாலான தோழர்கள் இரண்டு படைகளையும் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் ஆயுதம் அற்றவர்களாகவே கைது செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். தலைமறைவு வாழ்க்கை என்றால் என்ன என்பது பற்றி கொஞ்சமும் தெரியாமலேயே சூரி ஒவ்வொரு கதவாகத் தட்டி தலைவர் ஒளிந்திருக்கும் இடம் எனக்குத் தெரியும் என்று சொல்லும் காட்சி எடுக்கப்பட்டிருக்கிறது. நல்ல காமெடி காட்சி. தலைமறைவு தோழர்கள் முன்சீப் கோர்ட்டில் கேஸ் இருக்கும் போது பிடியை விட்டால் வீடு போய்விடும் என்பது போல ஒரே வீட்டில் நாள்கணக்காக கும்பலாக ஆயுதங்கள் உடன் இருப்பார்கள் என்று இயக்குனர் நினைத்து இருப்பது சரியான காமெடி.

என்ன பிரச்னை என்பதே படத்தில் இல்லை
வனத்தில் வாழும் மக்களுக்கு என்ன பிரச்சினை என்பதே படத்தில் இல்லை. படத்தில் வனத்துறையே இல்லை. பழங்குடிகள் வேறு, தலித்துகள் வேறு என்பதுகூட தெரியவில்லைபோல இருக்கின்றது. மக்களை சுரங்கத்துக்காக வெளியேற்றும் நடவடிக்கை ஏதாவது உள்ளதா என்றும் படத்தில் இல்லை. தலைமை செயலர், போலீஸ் அதிகாரிகள் கூடிக் கூடி பேசுகிறார்கள். ஆனால் ஒன்றுமே உருப்படியாக இல்லை. திரைக்கதையும் வசனங்களும் படு மோசம். அறிவோ உக்கிரமோ இல்லாத மிக மிக பலவீனமான உரையாடல்.

தர்மபுரியில் நடந்தது வர்க்க போராட்டம்
நக்சல் வேட்டை, வீரப்பன் வேட்டை ஆகியவை பல மாதங்கள் மாநிலத்தின் மிக உயர்ந்த மட்டத்தில் திட்டமிடல் செய்யப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்பட்டவை. படம் இந்த நடவடிக்கைகளின் முழுப் பரிமாணத்தையும் தவறவிட்டு அபத்தமாக எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் மக்கள் போராட்டமே இல்லை. ஆனால் இனத்துக்கு ஆபத்து என்றால் போராடுவார்கள் என்று சீவலப்பேரி பாண்டி போல ஒரு காட்சி. தர்மபுரியில் நடந்தது வர்க்கப்போராட்டம்.

ஜெயமோகனுக்கு பங்கு இல்லை என நினைக்கிறேன்
இந்த திருட்டில் ஜெயமோகனுக்கு பங்கு இருக்காது என்று நினைக்கிறேன். ஆனால் இன்னொருவர் கதைக்கு தான் பெயர் போடும்போது கூசியிருக்க வேண்டும். ஆனால் தனக்கும் இது பற்றியெல்லாம் தெரியும், படத்தில் வரும் இந்த விஷயங்களில் தனக்கும் பங்கு உண்டு என்பதுபோல பாசாங்கு செய்து அவர் பேட்டி கொடுத்து வருவது சுயமரியாதை அற்ற தன்மையை காட்டுகிறது” என விமர்சித்துள்ளார்.