சென்னை : நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த ஆண்டில் பிரம்மாண்டமான அளவில் திருமணம் செய்துக் கொண்டனர்.
7 ஆண்டுகளாக காதலித்துவந்த இவர்கள் கடந்த ஆண்டில் திருமணம் செய்தனர். ரஜினிகாந்த், ஷாருக்கான் என முன்னணி நடிகர்கள் இவர்களது திருமணத்தில் பங்கேற்றனர்.
திருமணத்தை தொடர்ந்து சில வாரங்களிலேயே தங்களது குழந்தைகள் குறித்த அறிவிப்பை இன்ஸ்டாகிராமில் விக்னேஷ் சிவன் அறிவித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.
நடிகை நயன்தாரா
நடிகை நயன்தாரா தென்னிந்திய அளவில் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் சிறப்பான பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக காணப்படுகிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகை என்ற பட்டத்தை தக்கவைத்து வருகிறார். தமிழிலும் விஜய், ரஜினி, அஜித் என முன்னணி நடிகர்களுடன் நடித்து தன்னுடைய இமேஜை மெயின்டெயின் செய்து வருகிறார். மலையாளத்திலும் மம்முட்டி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
நயன்தாரா -விக்னேஷ் சிவன் காதல்
நானும் ரவுடிதான் என்ற படத்தில் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாற, 7 ஆண்டுகள் நீடித்த இவர்களது காதல் கடந்த ஆண்டில் திருமணத்தில் முடிந்தது. தொடர்ந்து காதலர்களாகவே பல ரொமாண்டிக் பதிவுகளை இவர்கள் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் லைக்ஸ்களை வெகுவாக கவர்ந்தனர். கிடைக்கும் இடைவெளிகளில் எல்லாம் காதல் பறவைகளாக இவர்கள் பறந்தனர். ரசிகர்களின் லைக்ஸ்களும் குவிந்தன.
திருமணத்தில் முடிந்த காதல்
இதனிடையே கடந்த ஆண்டில் இவர்களது திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக, ரஜினி ஷாருக்கான் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் சூழ நடைபெற்றது. இந்தத் திருமணத்தை தொடர்ந்து இவர்கள் வெளிநாட்டில் தங்களது ஹனிமூனுக்காக சென்று, அதன் புகைப்படங்களையும் பகிர்ந்த நிலையில், இந்தப் புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகமாக விரும்பப்பட்டது. இந்நிலையில் அடுத்த சில வாரங்களிலேயே தங்களது குழந்தைகள் குறித்த அறிவிப்பை இன்ஸ்டாகிராமில் விக்னேஷ் சிவன் வெளியிட்டிருந்தார்.
வாடகைத்தாய் மூலம் குழந்தைகள்
திருமணமாகி சில வாரங்களிலேயே இது எப்படி சாத்தியம் என்று ரசிகர்கள் அதிர்ச்சி தெரிவித்த நிலையில், வாடகைத்தாய் மூலம் குழந்தைகளை பெற்ற விஷயமும் பகிரப்பட்டது. இதையடுத்து 5 ஆண்டுகளுக்கு முன்னதாகவே பதிவுத்திருமணம் செய்த விஷயமும் வெளியானது. இந்த விஷயம் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியது. ஆனால் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் நயன்தாரா தன்னுடைய கேரியரில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்.
குழந்தைகளின் பெயர்களை வெளியிட்ட விக்னேஷ் சிவன்
அஜித்தின் படம் கைநழுவிய நிலையில், விக்னேஷ் சிவனும் தன்னுடைய அடுத்தப்படம் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடவுள்ளார். இந்நிலையில் தன்னுடைய குழந்தைகளின் பெயர்களை விருது விழா ஒன்றில் நயன்தாராவும் இன்ஸ்டாகிராமில் விக்னேஷ் சிவனும் வெளிப்படுத்தியுள்ளனர். உயிர் ருத்ரோனில் என் சிவன் மற்றும் உலக் தெய்வேக் என் சிவன் என்று இவர்களின் குழந்தைகளின் பெயர்களை இருவரும் வெளிப்படுத்தியுள்ளனர்.
என் என்றால் தலைசிறந்த அம்மா
இதில் விக்னேஷ் சிவன் ஒரு படி மேலே சென்று இந்தப் பெயர்களில் உள்ள என் என்பது உலகின் தலைசிறந்த தாயான நயன்தாராவை குறிக்கும் என்று தெரிவித்துள்ளார். இதனிடையே நயன்தாராதான் உலகின் தலைசிறந்த அம்மாவா என கேள்வியும் எழுந்துள்ளது. இதுவரை தங்களது குழந்தைகளின் முகத்தை மீடியாவிற்கு காட்டாமல் இருந்த நயன் -விக்கி தம்பதி இன்றைய தினம் குழந்தைகளின் முகத்தையும் அவர்களது பெயர்களையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
ட்ரெண்டிங்கில் குடும்பத்தினர்
இந்நிலையில் குழந்தைகளின் பெயர்கள் மட்டுமில்லாமல் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் என குடும்பமே தனித்தனியாக ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் உள்ளனர். இந்தக் குழந்தைகளின் பெயர்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. பெயர்தான் கொஞ்சம் நீளமாக உள்ளது என்றபோதிலும், தங்களது உயிர் மற்றும் உலகமாக இந்தக் குழந்தைகளை அவர்கள் கருதுகிறார்கள் என்பதும் இந்தப் பெயரின்மூலம் வெளிப்பட்டுள்ளது.