இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தாவது, “சமூகநீதி பற்றி பேசுவதற்கு, அருகதை, தகுதி என்பதைவிட, அதற்கு ஒரு முகாந்திரம் வேண்டும்.
எந்த ஒரு முகாந்திரமும் இல்லாமல் சமூக நீதி மாநாடு நடத்தியதாக திமுகவினர் கூறிக் கொள்கின்றனர். அந்த மாநாட்டில் இந்தியா முழுவதும் உள்ள தலைவர்களா கலந்து கொண்டார்கள்?
ஏதோ ஊர், பெயர் தெரியாதவர்கள் தான், இந்த நிகழ்ச்சிகள் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் கலந்து கொண்டார்கள். எல்லாம் ஒரு பில்டப். அந்த பில்டப் எல்லாம் நிற்கப் போவதில்லை.
உண்மையில் சமூக நீதி என்று பார்த்தால், அதற்க்கு சொந்தம் கொண்டாட கூடிய இயக்கம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான்.
காரணம் இட ஒதுக்கீட்டிற்கு பிரச்சினை வந்தபோது, தமிழகத்தின் 50 சதவீதத்திற்கு மேல் இட ஒதுக்கீடு கூடாது என்ற மண்டல் கமிஷன் தீர்ப்பு வழங்கிய போது, நாடு முழுவதும் உள்ள தலைவர்களிடம் பேசி, அன்றைய பிரதமர் நரசிம்மராவை நேரில் சந்தித்த அம்மா அவர்கள், இட ஒதுக்கீடு வாதங்களை உச்சநீதிமன்றத்தில் எடுத்து வைத்து, இந்திய அரசியலமைப்பு சட்டத்தை திருத்தி, முப்பதாவது அட்டவணையில் சேர்த்து, ஒரு சமூக நீதியை நிலை நாட்டினார்.
சமூகநீதியை காப்பாற்றிய இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான். திரு மு க ஸ்டாலின் அருகில் உள்ள வீரமணியை கேட்டுப்பாருங்கள். அவர்தான் சமூக நீதியை காத்த வீராங்கனை என்ற ஒரு பட்டத்தை புரட்சி தலைவி அம்மாவுக்கு கொடுத்தவர்.
அம்மா உணவகத்திற்கு வந்தால் 300 கேள்விகள் கேட்பார்கள் என்று, சாப்பிடவே யாரும் வரக்கூடாது என்று, இந்த திமுக அரசாங்கம் சதி செய்து கொண்டிருக்கிறது. இப்படி எல்லாம் சமூக நீதியை காலில் போட்டு மிதித்து விட்டு, சமூக நீதி மாநாடு நடத்துகிறேன் என்று சொன்னால், உங்களை உலகம் கேலியாக பார்க்கும்.
இந்தியாவும், தமிழகமும் உங்களை கேள்வி கேட்கும். ஒரு கேலிச்சித்திரம் தான் இந்த விடியாத அரசும், விடியாத முதலமைச்சரும் மு க ஸ்டாலினும் இருக்கிறார் என்று தான் நான் சொல்கிறேன்” என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.