வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ” அரசின் கொள்கைகளை விமர்சிப்பது தேச விரோதம் கிடையாது”, என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
கேரளாவில் தனியார் டிவி நிறுவனத்தின் ஒளிபரப்புக்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது. அந்த டிவி சேனலுக்கு 10 ஆண்டுகள் ஒளிபரப்பு உரிமம் மத்திய அரசு வழங்கியிருந்தது. இதனை புதுப்பிக்க வேண்டும் என அந்த நிறுவனம் மனு அளித்திருந்தது. இதனை ஏற்காமல் , மத்திய அரசு தடை விதித்தது.
இதனை எதிர்த்து அந்த நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. நாட்டின் தேச பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மத்திய அரசு விளக்கம் அளித்திருந்தது. தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதி ஹிமா கோலி அடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறுகையில், துடிப்பான ஜனநாயகத்திற்கு, பத்திரிகை சுதந்திரம் அவசியமாகிறது. அரசு கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளை விமர்சிப்பதை தேசவிரோதமாக கருதக்கூடாது. தேச பாதுகாப்பு என்ற காரணத்தை பயன்படுத்தி குடிமக்களின் உரிமையை மறுக்கக்கூடாது. பத்திரிகைகள் அரசை ஆதரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை அரசுகள் கொண்டிருக்க முடியாது. அதே நேரத்தில், ஒரு செய்தி நிறுவனத்தை முடக்குவதற்கு அவர்கள், அரசை விமர்சித்தார்கள் என்ற காரணம் மட்டுமே போதுமானது கிடையாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Advertisement