புதுடெல்லி: இயற்கை பேரிடர்களை எதிர்கொள்வதில் உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
பேரிடர் தடுப்புக்கான உள்கட்டமைப்பு கூட்டமைப்பின் (சிடிஆர்ஐ) 2 நாள் சர்வதேச மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. இதில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக பங்கேற்றார். அவர் பேசியதாவது.
இன்றைய உலகில் அனைத்து நாடுகளும் மிக நெருக்கமாக பிணைக்கப்பட்டு உள்ளன. ஒருநாட்டின் ஏதாவது ஒரு பகுதியில் ஏற்படும் இயற்கை பேரிடரின் தாக்கம் அந்த நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் எதிரொலிக்கிறது. இதை கருத்தில் கொண்டு இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்வதில் உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
பேரிடர் காலத்தை கருத்தில் கொண்டு அனைத்து நாடுகளிலும் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் பேரிடர் காலத்தில் மக்களுக்கு விரைவாக, நிறைவாக சேவையாற்ற முடியும். போக்குவரத்து உள்கட்டமைப்பு எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு சமூக, டிஜிட்டல் உள்கட்டமைப்புக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களை விரைந்து மீட்க வேண்டும். அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்க வேண்டும். அவர்கள் வெகுவிரைவில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டும்.கடந்த கால பேரிடர்களின்போது கற்றுக் கொண்ட அனுபவங்களை மனதில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இயற்கை பேரிடர்களில் இருந்து சிறிய தீவு நாடுகளை காப்பாற்ற ரூ.410.94 கோடியில் புதிய நிதியம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் தீவு நாடுகளில் உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும்.
இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வெப்ப அலை பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. தீவு நாடுகளில் நிலநடுக்கம், புயல், எரிமலை வெடிப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. துருக்கி, சிரியாவில் அண்மையில் ஏற்பட்ட பூகம்பத்தால் பெரும் உயிரிழப்பு, சேதம் ஏற்பட்டிருக்கிறது. இரு நாடுகளிலும் சிடிஆர்ஐ உறுப்பு நாடுகள் முழுமையாக மீட்பு, நிவாரண பணிகளில் ஈடுபட்டன.இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
அமெரிக்காவின் சர்வதேச வளர்ச்சி அமைப்பின் நிர்வாகி சமந்தா பவர் பேசும்போது, ‘‘அனைத்து துறைகளிலும் இந்தியா வளர்ச்சி அடைந்திருக்கிறது. இந்தியாவின் முயற்சியால் பேரிடர் தடுப்புக்கான உள்கட்டமைப்பு கூட்டமைப்பு உருவாகி உள்ளது. அதற்காக இந்தியாவைப் பாராட்டுகிறேன். இயற்கை பேரிடரை எதிர்கொள்வது தொடர்பாக அமெரிக்கா மற்றும் இந்திய உயர் கல்வி நிறுவனங்கள் இணைந்து செயல்பட உள்ளன. இதற்காக ரூ.42 கோடி நிதியுதவி வழங்கப்படும்’’ என்றார்.
மோடி உருவாக்கிய சிடிஆர்ஐ அமைப்பு
கடந்த 2001-ம் ஆண்டு குஜராத்தில் பூகம்பம் ஏற்பட்டது. இதில் சுமார் 20,000 பேர் உயிரிழந்தனர். 3.4 லட்சம் வீடுகள் இடிந்தன. அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பூகம்ப பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொண்டார். இந்த பேரிடர் பாதிப்புகள் அவரது மனதில் ஆழமாகப் பதிந்தது. கடந்த 2014-ம் ஆண்டில் நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு சர்வதேச அளவில் இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ள புதிய கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று அவர் விரும்பினார்.
இதன்படி கடந்த 2019-ம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐ.நா. பருவநிலை மாறுபாடு மாநாட்டின்போது, ‘பேரிடர் தடுப்புக்கான உள்கட்டமைப்பு கூட்டமைப்பு’ (சிடிஆர்ஐ) என்ற அமைப்பை பிரதமர் மோடி தொடங்கினார். இதில் 40 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.