காபூல்: ஆப்கானிஸ்தான் பெண்கள் ஐ.நா. அமைப்பில் பணிபுரிய தலிபான்கள் தடைவிதித்துள்ளனர். இதனை ஐக்கிய நாடுகள் அமைப்பு உறுதி செய்துள்ளது.
இது குறித்து ஐக்கிய நாடுகள் சபை தரப்பில் வெளியிட்ட தகவலில், “ஐ. நா. அமைப்பில் ஆப்கன் பெண்கள் பணிபுரிய தலிபான்கள் அரசு தடை விதித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை அவர்கள் எழுத்துபூர்வமாக அறிவிக்காமல், வாய்மொழியாக அறிவித்துள்ளனர். தலிபான்களின் இந்த முடிவை நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாது. பெண் ஊழியர்கள் இல்லாமல் மருத்துவத் துறை சார்ந்த இங்குள்ள உயிர் காக்கும் கருவிகளை இயக்க முடியாது” என்று தெரிவித்துள்ளது.
கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள ஆப்கானிஸ்தானுக்கு ஐ.நா. குழு, மனிதாபிமான உதவிகளை செய்து வருகிறது. இதில் பெண்களே முக்கிய அங்கம் வகிக்கின்றனர். இந்த நிலையில், ஐ.நா அமைப்பில் செயல்படும் பெண் ஊழியர்களுக்கு தலிபான்கள் தடை விதித்துள்ளது. ஆனால், வெளிநாட்டைச் சேர்ந்த பெண்கள் ஐ நா.வுக்காக ஆப்கானிஸ்தானில் பணிபுரியலாம் என்று தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் கடந்த 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டத்தின்படியே ஆட்சி என்று அவர்கள் அறிவித்தனர். எனினும், கடந்த முறையைப் போல் ஆட்சி இருக்காது என்றும், பெண் கல்வி; பெண் சுதந்திரம் பேணப்படும் என்றும், உலக நாடுகளுடன் நட்புறவு ஏற்படுத்தப்படும் என்றும் அவர்கள் உறுதியளித்தனர். ஆனால், அவர்களின் அறிவிப்புக்கு மாறாக தலிபான் நிர்வாகம், ஆப்கானிஸ்தானில் பெண்கள் பனிக்கு செல்ல அனுமதி மறுத்தனர். சிறுமிகள் உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு செல்வது தடை விதித்தது. பல்கலைக்கழங்களிலும் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.