கரு.நாகராஜன், மாநிலத் துணைத் தலைவர், பா.ஜ.க
“ஜோசப் ஐயா சொல்லியிருக்கும் கருத்து குறித்து எனக்கு விவரம் தெரியவில்லை. ஆனால், வெறுப்புப் பேச்சுகள்… அதிலும் மதரீதியான வெறுப்புப் பேச்சுகள் பேசுவது யார் என்பது இங்குள்ள அனைவருக்கும் தெரியும். தமிழகத்திலுள்ள ஒருசில கட்சிகள், யாரேனும் இந்து மதத்தைத் தவறாகப் பேசினால் அவர்களைக் கண்டிப்பதில்லை. அதேசமயம் மற்ற மதங்கள் குறித்து யாரேனும் விமர்சித்தால் மட்டும் உடனடியாக எதிர்வினை ஆற்றுகிறார்கள். இது நியாயமா? திருமாவளவன் போன்றவர்களே மதரீதியான வெறுப்புப் பேச்சுகளைத் தொடர்ந்து பேசுகிறார்கள். கோயில் கோபுரங்களைப் பார்த்தால் ஆபாச பொம்மைகள்போலத் தெரிகின்றன என்கிறார்கள். கந்த சஷ்டி கவசத்தைக் கொச்சைப்படுத்தி, வெறுப்புணர்வோடு காணொளி வெளியிடுகிறார்கள். தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரான ஆ.ராசா, இந்துக்கள் குறித்து கொச்சையாகவும், மிகவும் அருவருக்கத்தக்க வகையிலும் தொடர்ந்து பேசிவருகிறார். அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு காவல் நிலையங்களில் புகாரளித்தோம். புகார்மீது நடவடிக்கை எடுக்கவேண்டியது நீதிமன்றம்தானே… இதில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க என்ன இருக்கிறது… என்றுமே பிற மதங்களைக் கொச்சைப்படுத்திப் பேசும் வழக்கம் பா.ஜ.க-வில் கிடையாது.”
முத்தரசன், மாநிலச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
“சரியானது. பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்-ஸின் பெரும்பாலான தலைவர்கள் தொடர்ந்து வெறுப்புக் கருத்துகளைத்தான் பேசிவருகிறார்கள். இதில், பலரும் மதரீதியான கருத்துகளையும் தரம் தாழ்ந்த விமர்சனங்களையும் கூறுகிறார்கள். சாதாரண மக்கள் பேச யோசிக்கும் ஒரு மோசமான கருத்தைக்கூட, ஆளும் பா.ஜ.க கட்சியைச் சேர்ந்தவர்கள் சர்வ சாதாரணமாகப் பேசுகிறார்கள். இப்படிப் பேசுவது தவறு என்று தங்கள் கட்சிக்காரர்களைத் தடுக்க வேண்டிய ஆளும் பா.ஜ.க அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களை ஊக்குவித்தும், பாதுகாத்தும் வருகிறது. காங்கிரஸ் பெண் தலைவர் ஒருவரை பா.ஜ.க-வைச் சேர்ந்தவர் ‘சூர்ப்பனகை’ என்று சொல்கிறார். அவர்மீது எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனால், ஒன்றிய அரசு குறித்தும், பா.ஜ.க தலைவர்கள் குறித்தும் சரியான கருத்தை யாராவது பேசினால்கூட, அவர்கள்மீது உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இப்படி ஆயிரம் உதாரணங்கள் இருக்கின்றன. அதனால்தான் உச்ச நீதிமன்றமே இப்படி ஒரு கருத்தைக் கூறியிருக்கிறது. அரசியலில் கொள்கைரீதியான விமர்சனம் ஏற்புடையது. ஆனால், தனிப்பட்ட முறையில் விமர்சனமும், வெறுப்புப் பேச்சுகளும் நாட்டின் ஜனநாயகத்துக்கே ஆபத்தானவை!”