சென்னை: கரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில், தேவை இருந்தால் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டுதல், கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடலாம் என்றும், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு, சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்று தினசரி பாதிப்பு 200-ஐ நெருங்கிக் கொண்டிருக்கிறது. சென்னையில் மட்டும் தொற்று பாதிப்பு 50-ஐக் கடந்துள்ளது. தமிழகத்தைப் போலவே, மகாராஷ்டிரா, கேரளா, குஜராத், டெல்லி, கர்நாடகாவிலும் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.
அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாநிலங்களுக்கும், மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
தமிழகத்தில் எக்ஸ்பிபி மற்றும் பிஏ2 வகை ஒமிக்ரான் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, முன்னெச்சரிக்கையாக மாநிலம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கடந்த 1-ம் தேதி முதல் முகக் கவசம் கட்டாயமாக்கப்பட்டது. இதையடுத்து, மருத்துவமனைகளில் நோயாளிகள், பார்வையாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் முகக் கவசம் அணிகின்றனர். முகக் கவசம் இல்லாதவர்களுக்கு, மருத்துவமனை தரப்பில் இலவசமாக முகக் கவசம் வழங்கப்படுகிறது.
இதையடுத்து, தியேட்டர்கள், குளிர்சாதன வசதி கொண்ட அரங்கங்களில் இருப்பவர்கள் முகக் கவசம் அணியுமாறும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதேபோல, கரோனா தொற்று பாதிப்பு திடீரென்று அதிகரிக்கும் பட்சத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள், மருந்துகள் தயார் நிலையில் வைக்கும்படி மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், அடுத்தகட்டமாக தொற்று பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில், பொது இடங்களில் முகக் கவசம் அணிதல், கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுதல், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்தல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தொற்றால் பாதிக்கப்படுவோர் வீடுகளில் தேவை இருந்தால் ஸ்டிக்கர் ஒட்டுவது, ஓரிரு வாரங்கள் கண்காணிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்று மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு, அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்படுவோர் வீடுகளில் தேவை இருந்தால் ஸ்டிக்கர் ஒட்டுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடலாம்.