கர்நாடகாவில் தனது கடைசி அஸ்திரமான புலனாய்வு அமைப்புகளை பயன்படுத்த பிரதமர் மோடி திட்டம் – காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: கர்நாடகா தேர்தலில் போட்டியிட இருக்கும் வேட்பாளர்கள் மற்றும் தலைவர்களின் வீடுகளில் சோதனை நடத்த அம்மாநிலத்திற்கு புலனாய்வு அமைப்புகளை மத்திய அரசு அனுப்பி இருப்பதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. ரன்தீப் சுர்ஜ்வாலா கூறியதாவது: கர்நாடகா தேர்தலில் பாஜக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தங்களின் தொகுதிகளில் போட்டியிட மறுத்து வருகின்றனர். இதனால் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க அக்கட்சி திணறிவருகிறது இதுகுறித்த ஆதாரம் எங்களிடம் இருக்கிறது. கர்நாடகாவில் மிகப்பெரிய அளவில் பாஜகவினர் கட்சியில் இருந்து வெளியேறி வருகின்றனர். 10க்கும் அதிமாக எம்எல்ஏக்கள், எம்எல்சிக்கள், முன்னாள் எம்எல்ஏ, எம்எல்சி.,க்கள், வாரியம் மற்றும் கார்ப்பரேஷன் தலைவர்கள் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸில் இணைந்து வருகின்றனர்.

இதனால், பிரதமர் மோடி அவரது கடைசி அஸ்திரத்தைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளார். அந்த முயற்சியும் மோசமான தோல்வியை சந்திக்கும். மாநில காங்கிரஸ் தலைவர்கள், வேட்பாளர்கள், தேர்தலில் போட்டிய தகுதியான கட்சி உறுப்பினர்களின் வீடுகளில் சோதனை நடத்துவதற்காக நூற்றுக்கணக்கான வருமான வரித்துறை, அமலாக்கத்துறை அதிகாரிகள் கர்நாடகாவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.

ஆனால், பிரதமர் மோடி மற்றும் அவரது வருமானவரித்துறை, அமலாக்கத்துறையின் போலியாக, மோசடியாக நடத்தப்படும் இந்த சோதனைகளால் மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்கும் நிலையில் இருக்கும் காங்கிரஸை தடுத்து நிறுத்த முடியாது.

பாஜகவின் வருமானவரித்துறை, அமலாக்கத்துறையால், மக்களின் உதவியுடன் 150க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற இருக்கும் காங்கிரஸின் இந்த பயணத்தைத் தடுக்க முடியாது. எங்களுக்கு கிடைத்திருக்கும் தகவலின் படி, நாளை சோதனை நடத்த இருக்கும் அனைத்து புலனாய்வு அமைப்பு அதிகாரிகளுக்கும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம், நீங்கள் செய்யும் ஒவ்வொரு தவறுகளுக்கும் பாஜக அரசு கணக்கு கொடுக்க வேண்டியதாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

கர்நாடகாவின் எதிர்க்கட்சித்தலைவர் சித்தராமையா கூறுகையில்,” காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் மாநிலத்தில் ஆட்சி அமைக்கும். சுர்ஜ்வாலா கூறியதுபோல், ஏராளமான எம்எல்ஏக்கள், எம்எல்சிக்கள், வாரியம், கார்ப்பரேஷன் தலைவர்கள் தங்களின் பதவிகளை துறந்துவிட்டு பாஜகவில் இருந்து வெளியேறி காங்கிரஸில் இணைந்து வருகின்றனர். கர்நாடகாவில் காங்கிரஸ் அலை வீசுவது அனைவரும் அறிந்ததே கர்நாடகாவில் பாஜக வீழ்ச்சியடைந்து வருகிறது, அதனால் மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாது என்பது அக்கட்சியின் உயர் பதவிகளில் இருப்பவர்கள் நன்றாக உணர்ந்திருக்கிறார்கள். கர்நாடாகவில் 2023 ஆம் ஆண்டு தேர்தலில் வெறுப்பு மற்றும் இந்துத்துவா அரசியல் செல்லுபடியாகாது” என்று தெரிவித்தார்.

கர்நாடகா மாநிலத்தில் வரும் மே 10-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 13-ம் தேதி நடக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.