கர்நாடகா தேர்தல்: களத்தில் இறங்கிய கன்னட சூப்பர் ஸ்டார்; டாப் கியரில் பாஜக.!

கிச்சா சுதீப்

பாகுபலி, நான் ஈ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த பிரபல கன்னட சூப்பர் ஸ்டார் கிச்சா சுதீப் கர்நாடகாவில் பாஜகவுக்காக பிரச்சாரம் செய்யவுள்ளார். இன்று அறிவிப்பை வெளியிட்ட நடிகர், வரும் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்றும் தெளிவுபடுத்தினார்.

இதுகுறித்து கிச்சா சுதீப் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன், தேர்தலில் போட்டியிட மாட்டேன்’’ என்றார். மேலும், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையுடன் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், எந்தக் கட்சியில் இருந்தாலும், தற்போதைய முதல்வருக்கு ஆதரவாக இருப்பேன் என்று கூறினார்.

காட்ஃபாதர்

முதலமைச்சரை தனது காட்ஃபாதர் என்று குறிப்பிட்ட அவர், முதல்வர் பொம்மையை ஆதரிப்பதாக நான் கூறும்போது, அவர் பரிந்துரைத்த அனைவரையும் ஆதரிப்பேன். பாஜகவின் சித்தாந்தத்துடன் நீங்கள் உடன்படுகிறீர்களா என்று கேட்கப்பட்டதற்கு, “பிரதமர் மோடி எடுத்த சில முடிவுகளை நான் முற்றிலும் மதிக்கிறேன், ஆனால் இன்று நான் இங்கு அமர்ந்திருப்பதற்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று நடிகர் கூறினார்.

கர்நாடகா தேர்தல்

மொத்தம் 224 சட்டப்பேரவை தொகுதிகளைக் கொண்ட கர்நாடகாவில் வருகிற மே மாதம் 10ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. மே 13ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 113 தொகுதிகளில் வெற்றி பெற்றால் தான் பெரும்பான்மை பலத்துடம் ஆட்சியமைக்க முடியும் என்பது குறிப்பிடதக்கது.

மும்முனைப் போட்டி

கர்நாடகாவில் ஆளும் பாஜக, முக்கிய எதிர்கட்சி காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி முதன் முறையாக போட்டியிட்டாலும், அக்கட்சிக்கு மாநிலத்தில் செல்வாக்கு இல்லை என்றே அரசியல் நோக்கர்கள் கூறிவருகின்றனர்.

கர்நாடக தேர்தலில் களமிறங்கும் அதிமுக: பாஜக கூட்டணியில் எத்தனை இடங்கள்?

அதேபோல் மீண்டும் ஆட்சியை பிடிக்க பாஜக பல்வேறு வியூகங்களை வகுத்து செயல்பட்டு வருகிறது. பாஜகவின் முக்கிய தேசிய தலைவர்கள், பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட ஒன்றிய அமைச்சர்கள் கர்நாடகாவில் முகாமிட்டு தேர்தல் வேலைகளை முடுக்கிவிட்டு செயல்படுகின்றனர். அதேபோல் காங்கிரஸ் கட்சியிலும் முக்கிய தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொங்கு சட்டசபை

கடந்த முறை போலவே, நடப்பு தேர்தலிலும் கர்நாடகாவில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என இது வரை எடுக்கப்பட்ட கருத்து கணிப்பு முடிவுகள் சொல்கின்றன. கடந்த முறை எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து முதலைமைச்சராக குமாரசாமி பதவி ஏற்றார். அதேபோல் தான் தற்போதும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.