ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மேல்விஷாரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்ணுக்கு சத்து மாத்திரைகளுக்கு பதிலாக பூச்சி மாத்திரைகளை கொடுத்து சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சார்ந்த ஜெயப்பிரியா என்ற பெண்மணிக்கு பிரேம குமாரி என்ற செவிலியர் கர்ப்ப காலத்தில் சாப்பிடுவதற்கான சத்து மாத்திரைகளை வழங்கி வந்திருக்கிறார். இந்நிலையில் தனக்கு கொடுக்கப்பட்ட மாத்திரைகள் தீர்ந்து விட்டதால் புதிய மாத்திரைகள் வாங்குவதற்காக ஆரம்ப சுகாதார நிலையம் வந்துள்ளார் ஜெயப்பிரியா.
ஜெயப்பிரியா கொண்டு வந்த பழைய மாத்திரை அட்டைகளை கவனித்த செவிலியர் ஒருவர் இது பூச்சி மாத்திரைகள் என்று கூறியதால் அதிர்ச்சியடைந்த ஜெயப்பிரியாவும் அவரது உறவினர்களும் மருத்துவமனை நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இரண்டு மாத்திரைகளின் அட்டைகளும் ஒரே நிறத்தில் இருந்ததால் தவறு ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவமனை நிர்வாகம் அவர்களிடம் சமாதானம் செய்தது. ஆனாலும் சமாதானம் ஆகாத ஜெயப்பிரியாவும் அவரது உறவினர்களும் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து செவிலியர் பிரேம குமாரியை பணியிடை நீக்கம் செய்ததாக ஆரம்ப சுகாதார நிலைய இயக்குனர் தெரிவித்தார்.