காவிரி டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் அமைக்க தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இன்று சட்டமன்றத்தில் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி ராஜா கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர உள்ளதாக
கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் நிலக்கரி சுரங்கத் திட்டத்தை தமிழக முதல்வர் அனுமதிக்கமாட்டார் என்று தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
தஞ்சை, திருவாரூர், கும்பகோணம் பகுதிகளில் நேற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் நேற்று (ஏப்ரல் 4) மாலை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “தஞ்சாவூரில் மார்ச் 14 ஆம் தேதி ஆய்வு கூட்டம் நடத்தினோம். அதனுடைய தொடர் நடவடிக்கை குறித்து ஆய்வு செய்வதற்காக இக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில், என்னென்ன திட்டங்கள், எவ்வளவு முடிக்கப்பட்டுள்ளது, எனக் கேட்டறிந்து, மீதமுள்ள திட்டங்களை விரைந்து முடிக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளேன்.
பூமாலை வணிக வளாகம், மகளிர் சுய உதவிக் குழுக் கட்டடங்கள் புனரமைப்பு பணியை விரைவில் முடிக்க வேண்டும் என்றும், தமிழக முதல்வர் திறப்பதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறோம் எனவும் கூறியிருக்கிறோம். இது தொடர்பாக அரசு அலுவலர்களும் விளக்கம் அளித்தனர். முதல்வரின் ஆணைப்படி அலுவலர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
இளைஞரணிக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு பொறுப்பேற்கும்போது, ஒவ்வொரு தொகுதியிலும் 10 ஆயிரம் பேர் சேர்க்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதில், 80, 85 சதவீதம் முடிவடைந்துவிட்டது. இப்போது, கட்சியில் உறுப்பினர் சேர்க்கை மேற்கொள்ளுமாறு தலைவர் கூறியுள்ளார். அப்பணியை செய்து வருகிறோம்.
இளைஞரணிக்கு திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நடத்த வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டார். அதுவும் முடிக்கப்பட்டு, இப்போது தொகுதிவாரியாக நடத்தவுள்ளோம். மேலும், ஒன்றிய அளவில் கூட்டம் நடத்த வேண்டும் என்கிற தலைவரின் ஆணைப்படி அப்பணியிலும் ஈடுபட்டுள்ளோம்.
காவிரி டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் ஒன்றிய அரசின் திட்டத்தை தமிழக முதல்வர் கண்டிப்பாக விடமாட்டார். இது தொடர்பாக பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதிவிட்டார். மேலும், சட்டப்பேரவையில் புதன்கிழமை ( இன்று ) மன்னார்குடி தொகுதி உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருகிறார். தமிழக முதல்வர் இத்திட்டத்தை கண்டிப்பாக அனுமதிக்கமாட்டார்” என்றார் அமைச்சர்.