சென்னை: சத்யா ஸ்டூடியோக்கு வழங்கப்பட்ட நிலத்தை மீட்கும் விவகாரத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அடையாரில் உள்ள சத்யா ஸ்டுடியோ நிறுவனத்துக்கு தமிழக அரசு கடந்த 1968-ல் 93,540 சதுர அடி நிலத்தை குத்தகைக்கு வழங்கியது. 1998-ல் குத்தகைக் காலம் முடிவடைந்த நிலையில், மேலும் 10 ஆண்டுகளுக்கு குத்தகை நீட்டிக்கப்பட்டது. 2004-ல் குத்தகை பாக்கி ரூ.31 கோடியை செலுத்தக் கோரி, மயிலாப்பூர் வட்டாட்சியர் சத்யா ஸ்டுடியோ நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். ஆனால், குத்தகை செலுத்தாதால் 2008-ல் அந்த நிலத்தை திருப்பி எடுக்க உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சத்யா ஸ்டுடியோ நிர்வாக இயக்குநர் சுவாமிநாதன், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அரசுக்குச் செலுத்தவேண்டிய ரூ.31.10 கோடி நிலுவையை சத்யா ஸ்டுடியோ நிர்வாகத்திடமிருந்து வசூலிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் 3 மாதங்களில் முடிக்கவேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து சத்யா ஸ்டுடியோ சார்பில் மேல்முறையீட்டு மனு தக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘அரசின் சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு நற்சான்றிதழ் அளிப்பது போல தனி நீதிபதியின் உத்தரவு உள்ளது. இணைப்புச் சாலை அமைக்கும் பணிக்கு ஒருபோதும் எதிராக இல்லை. பல்வேறு முக்கிய அம்சங்களை ஆராயாமல் இந்த வழக்கில், தனி நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
மேலும், 2024-ம் ஆண்டு வரையிலான வாடகை செலுத்தப்பட்டு விட்டது. 23 ஆயிரத்து 939 ரூபாய் வாடகையாக வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், 1998 முதல் 2001 வரைக்கும் ஒரு கோடியே 64 லட்சத்து 37 ஆயிரத்து 732 ரூபாயாகவும், 2001 முதல் 2004 வரை ஒரு கோடியே 90 லட்சத்து 97 ஆயிரத்து 491 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. தன்னிச்சையான இந்த தொகை உயர்வைத்தான் எதிர்க்கிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். அப்போது சத்யா ஸ்டுடியோ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மதன்பாபு, அதுவரை நிலத்தை மீட்கும் விவகாரத்தில் தற்போதைய நிலையே நீடிக்க உத்தரவிட வேண்டுமென கேட்டுக்கொண்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தற்போதைய நிலையே நீடிக்க வேண்டுமென உத்தரவிட்டனர்.