கும்பகோணம்: கும்பகோணத்தை தனி வருவாய் மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சோழபுரத்தில் தமிழக முதல்வருக்கு நினைவூட்டும் வகையில் தபால் கார்டு அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.
கும்பகோணம் தனி வருவாய் மாவட்டமாக அறிவிக்க வேண்டும் எனக் கடந்த பல ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது, தேர்தல் பரப்புரைக்கு வந்த தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் 100 நாட்களில் கும்பகோணம் தனி வருவாய் மாவட்டமாக அறிவிக்கப்படும் என உத்தரவாதம் அளித்தார். ஆனால், 20 மாதங்களுக்கு மேலாகியும், அறிவிக்காமல் உள்ளதால், நடைபெற்றுக்கொண்டிருக்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே அறிவிக்க வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு நினைவூட்டும் வகையில் சோழபுரம் அஞ்சலகத்தில் 1 லட்சம் தபால் கார்டு அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.
ஆனால், போதுமான தபால் கார்டு கிடைக்காததால் 13 ஆயிரம் கார்டுகள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று அனுப்பி வைத்து, கண்டன முழக்கமிட்டனர். கும்பகோணம் புதிய மாவட்டம் கோரும் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ,மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார்.
விடுதலை தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் தை.சேகர் வரவேற்றார். அதிமுக மாவட்ட ஜெ. பேரவை இனை செயலாளர் அழகு.த.சின்னையன் காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவர் டி,ஆர்.லோகநாதன், பாஜக மாவட்ட தலைவர் சதீஸ்குமார், பாமக மு.மாநில பொறுப்பாளர் எஸ்.கே.ரமேஷ் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு டி.ஆர்.குமரப்பா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி தங்கையன், அமமுக மு.ஒன்றிய செயலாளர் ஏ.பி.கே. குமார் கும்பகோணம் வர்த்தக சங்க தலைவர் கோ.எஸ்.சேகர் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர். முடிவில் சோழபுரம் பேரூராட்சி உறுப்பினர் க.வினோத்குமார் நன்றி கூறினார்.