கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம் எலத்தூர் பகுதியில் சென்றுகொண்டிருந்த ஆலப்புழாவிலிருந்து கண்ணூர் செல்லும் எக்ஸிகியூட்டிவ் ரயிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பயணிகள்மீது தீவைத்து எரிக்கப்பட்ட கொடூரச் சம்பவம் நடந்தது. மூன்றுபேர் உயிரைக் காவுவாங்கிய இந்தச் சம்பவத்துக்குப் பிறகு குற்றவாளி தப்பி ஓடிவிட்டார். அவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகியிருந்தது. அவர் கண்ணூர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டதாகவும் தகவல் கசிந்தது. இந்த நிலையில், அவரின் உருவ வரைபடத்தை வெளியிட்டது கேரள போலீஸ்.
ஏ.டி.ஜி.பி அஜித்குமார் தலைமையில் 18 தனிப்படைகளும் அமைக்கப்பட்டன. என்.ஐ.ஏ., ஐ.பி, ரயில்வே போலீஸ் எனப் பல விசாரணைக்குழுக்கள் குற்றவாளியைத் தேடிவந்தன. சம்பவம் நடந்த பகுதியில் மீட்கப்பட்ட பேக்கில் இருந்த தகவலின் அடிப்படையில் குற்றவாளியின் பெயர் ஷாருக் சைஃபி (Shahrukh Saifi) எனத் தெரியவந்தது.
இதையடுத்து, நாடு முழுவதும் ஷாருக் சைஃபி என்ற பெயரில் குற்றப் பின்னணி கொண்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் உடலில் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த குற்றவாளி கைதுசெய்யப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
குற்றவாளியை மகாராஷ்டிராவில் வைத்து ஏ.டி.எஸ் குழு நேற்று இரவு கைதுசெய்ததாகக் கூறப்படுகிறது. மகாராஷ்டிராவில் ரத்தினகிரி பகுதியில் ஒரு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த அவர் தப்பிச்செல்ல முயன்றபோது அவரை மடக்கிப் பிடித்திருக்கின்றனர். அவரின் முகத்திலும், இடது கண்ணிலும் காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ரயிலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்த சமயத்தில் அல்லது அவர் ஓடும் ரயிலிலிருந்து குதித்த சமயத்தில் காயம் ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
காயத்துக்குச் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் சென்றிருப்பதாகவும், செல்போன் லொகேஷன் அடிப்படையில் அவர் இருக்கும் இடத்தை போலீஸ் கண்டறிந்ததாக விவரங்கள் தெரிவிக்கின்றன. அவரை கேரளா கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அதே சமயம் கைது குறித்து போலீஸ் அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.