மும்பை,:கேரளாவில், ஓடும் ரயிலில் பயணியர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி ஓடிய குற்றவாளி ஷாரூக் சைபி என்பவரை, மஹாராஷ்டிராவின் ரத்னகிரி ரயில் நிலையத்தில் போலீசார் நேற்று அதிகாலை கைது செய்தனர்.
கேரளாவின் ஆலப்புழாவில் இருந்து கண்ணுார் நோக்கி, ‘எக்சிக்யூட்டிவ் எக்ஸ்பிரஸ்’ ரயில் கடந்த 2ம் தேதி இரவு சென்று கொண்டிருந்தது. கோழிக்கோடு சிட்டி ரயில் நிலையத்தை தாண்டி, இரவு 9:45 மணிக்கு கொரபுழா ரயில்வே பாலத்தை அந்த ரயில் தாண்டியது.
அப்போது, ரயிலின் முன்பதிவு இல்லாத, ‘டி – 1’ பெட்டியில் இருந்த பயணி, திடீரென தன் பையில் இருந்து பெட்ரோல் பாட்டிலை எடுத்து பயணியர் மீது ஊற்றி தீ வைத்தார்.
போலீசார் வலை
இதில் பலர் மீது தீ பற்றி அவர்கள் அலறினர். ரயில் பெட்டிக்கு உள்ளேயும் தீ பரவியது. பயணியர் பயத்தில் அங்கும் இங்கும் ஓடினர்.
இந்த சம்பவத்தில், எட்டு பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பயத்தில் ரயிலில் இருந்து வெளியேற முயன்ற பெண், 2 வயது குழந்தை மற்றும் ஒரு ஆண் உட்பட மூன்று பேர் தண்டவாளத்தில் விழுந்து உயிரிழந்தனர்.
ரயிலுக்கு தீ வைத்த குற்றவாளி சம்பவ இடத்தில் இருந்து தப்பினார். பயணியர் கொடுத்த தகவலின் அடிப்படையில் குற்றவாளியின் படத்தை வரைந்த போலீசார், வலைவீசி தேடி வந்தனர்.
விசாரணையில் குற்றவாளி வட மாநிலத்தை சேர்ந்த ஷாரூக் சைபி என்பது தெரியவந்தது. அவர் எடுத்து வந்த பையில் இருந்து, ‘சிம் கார்டு’ இல்லாத ‘மொபைல் போன்’ கைப்பற்றப்பட்டது.
அதன், ஐ.எம். இ.ஐ., எண் வாயிலாக தெற்கு டில்லியின் ஷாஹீன் பாக் என்ற இடத்தில் வசிக்கும் ஷாரூக் சைபியின் குடும்பத்தினரை கேரள போலீசார் தொடர்பு கொண்டனர்.
அப்போது, மார்ச் 31 முதல் தன் மகனை காணவில்லை என்றும், இது தொடர்பாக போலீசில் புகார் அளித்து இருப்பதாகவும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
மேலும், அவர்களிடம் விசாரணை நடத்தி, குற்றவாளி ஷாரூக் சைபி பயன்படுத்தி வந்த ஆறு மொபைல் போன் எண்களை போலீசார் கைப்பற்றினர்.
அந்த எண்களை தொடர்ந்து கண்காணித்து வந்தபோது, ஒரு எண் நேற்று அதிகாலை 1:30 மணிக்கு, ‘ஆன்’ செய்யப்பட்டது.
மஹாராஷ்டிராவின் ரத்னகிரி மாவட்ட அரசு மருத்துவமனை பகுதியில் அந்த எண்ணுக்குரிய நபர் இருப்பது தெரியவந்தது.
விசாரணை
இது தொடர்பாக மஹாராஷ்டிராவின் பயங்கரவாத தடுப்பு படைக்கு, கேரள போலீசார் தகவல் தெரிவித்தனர். அவர்களின் உத்தரவின்படி, உள்ளூர் போலீசார் ரத்னகிரி மாவட்ட மருத்துவமனைக்கு சென்று விசாரித்தனர்.
அப்போது தலையில் காயத்துடன் வந்த நபர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சொல்லாமல் தப்பி சென்றது தெரியவந்தது. உடனடியாக அப்பகுதி முழுதும் போலீசார் சோதனையிட்டனர்.
இதில், ரத்னகிரி ரயில் நிலையத்தில் குற்றவாளி ஷாரூக் சைபி பதுங்கி இருப்பது தெரிந்து போலீசார் அவரை கைது செய்தனர்.
கேரள ரயிலுக்கு தீ வைத்துவிட்டு ரயிலில் இருந்து தப்பும் போது தவறி விழுந்ததால், குற்றவாளி சைபிக்கு தலையில் அடிபட்டது விசாரணையில் தெரியவந்தது.
மேலும், மன ரீதியாக அவர் தெளிவாக இருப்பதாகவும், விசாரணையில், கேரள ரயிலுக்கு தீ வைக்கும்படி சிலர் கேட்டுக் கொண்டதாக அவர் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதன் உண்மைத் தன்மை குறித்தும், இது பயங்கரவாத நடவடிக்கையா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
உள்ளூர் நீதிமன்றத்தில் முறையான அனுமதி பெற்ற பின், குற்றவாளி ஷாரூக் சைபியை போலீசார் இன்று கேரளா அழைத்து வந்து விசாரிப்பர் என கூறப்படுகிறது.
முதல்வர் வாழ்த்து!
கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று கூறியதாவது:சம்பவம் நடந்து மூன்று நாட்களில் குற்றவாளி கைது செய்யப்பட்டதன் வாயிலாக, கேரள போலீசாரின் திறமை வெளிப்பட்டுள்ளது. விசாரணையில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரிகள், அவர்களுக்கு ஒத்துழைப்பு அளித்த மஹாராஷ்டிரா பயங்கரவாத தடுப்பு படை, மத்திய உளவுப்படை, ரயில்வே பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட அனைத்து விசாரணை அமைப்புகளுக்கும் மனமார்ந்த நன்றி. இந்த சம்பவத்தில் உயிரிழந்த மூவரின் குடும்பத்தினருக்கு தலா, ஐந்து லட்சம் ரூபாய் உதவித் தொகை அளிக்க, அமைச்சரவை குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.