இந்தியாவுக்கு போர்ச்சுக்கீசிய பயணி வாஸ்கோடகாமா வந்தது முதல் மிக முக்கிய நகராக இருப்பது கேரள மாநிலக் கொச்சிதான். இது போர்ச்சுக்கீசியர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்களின் கோட்டைகள் நிறைந்த பகுதியாக இருக்கிறது.
இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளின் வருகையுடன் இந்நகர் எப்போதும் பரப்பரப்பாக இருந்துகொண்டிருக்கிறது. இதில் போர்ட் கொச்சி மட்டஞ்சேரி பகுதி ஓவியக் கலைஞர்களின் புகழிடமாக இருக்கிறது.
சுமார் 3 கிலோ மீட்டர் நீண்டிருக்கும் மட்டஞ்சேரி ஜூ டவுன் வீதியில் ஓடுகள் வேயப்பட்ட உயரமான கட்டடங்கள் வரிசையாக இருப்பதே ஓவியம் போன்றுதான் இருக்கும். நடிகர் மாதவன் நடித்த ’மாறா’ திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் இப்பகுதியில்தான் படமாக்கப்பட்டிருக்கின்றன. வேண்டுமெனில் மீண்டும் ஒருமுறை மாறா படத்தைப் பாருங்கள். அந்த அழகிய வீதியைக் கண்டு வியப்பீர்கள்.
உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை வெனிஸ் நகரில் ஓவியக்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு அடுத்தபடியாக கடந்த 2012 முதல் இந்தியாவில் உள்ள கொச்சியில் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை ஓவியக்காட்சி நடத்தப்பட்டுவருகிறது.
சுமார் 12 அரங்குகள், ஒவ்வொரு அரங்கிலும் 20 முதல் 30 கலைஞர்களின் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்படும். இதில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மியான்மர், இலங்கை, வியட்நாம், ஜப்பான், பெல்ஜியம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கலைஞர்கள் வந்து கலந்துகொள்கின்றனர்.
இந்த ஓவியக்காட்சியில் தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஓவியராக பெனிதா பெர்சியா முதன்முதலாகக் கலந்துகொண்டார். அவரைத் தொடர்ந்து ஓவிய மாணவர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளார்கள். இந்நிலையில் சென்னை அரசு கவின் கலைக்கல்லூரியில் வெவ்வேறு காலகட்டத்தில் படித்துமுடித்த கலைஞர்கள் 25 பேர் ஒன்றிணைந்து திணை வாசிகள் என்ற அமைப்பாக உருவாக்கி ஜூடவுன் வீதியில் எஸ்.வி ஆர்கேட் ஓவியக்காட்சி அரங்கை அமைத்துள்ளனர்.
இங்கு புகைப்படக் கலைஞர்கள், ஓவியக் கலைஞர்கள், சிற்பக் கலைஞர்கள், பாடகர்கள், நாடக மற்றும் சினிமா நடிகர் உள்ளிட்ட கலைஞர்களும் நிறைந்திருக்கிறார்கள். வீதி முழுவதும் அழகியல் நிறைந்த ஆடைகளும், பழங்காலப் பொருள்களும், அணிகலன்களும் விற்பனைக்கு நிறைந்துகிடக்கின்றன.
இதுகுறித்து நம்மிடம் பேசிய திணை வாசிகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஓவியர் சரண்ராஜ், “கொச்சியில் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் பினாலே 2022 டிசம்பர் மாதம் தொடங்கி 2023 ஏப்ரல் 10ஆம் தேதி வரை நடக்கிறது.
இந்த நிலையில், திணை வாசிகள் அமைப்பின் சார்பில் ஓவியக்காட்சி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது கலைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்த அரங்கு தமிழகத்தைச் சேர்ந்த மூத்த ஓவியரும் சென்னை அரசு கவின் கலைக் கல்லூரியின் முன்னாள் முதல்வருமான சந்ரு, கேரளாவைச் சேர்ந்த மூத்த ஓவியரும், சிற்பியுமான ரகுநாதன் ஆகியோர் சேர்ந்து மார்ச் 7 ஆம் தேதி திறந்து வைத்தனர். தொடர்ந்து ஏப்ரல் 10 ஆம் தேதி வரை நடக்கும்.
சங்க இலக்கியத்தில் கூறப்படும் ஐந்திணைகள் போல ஐவகை நிலப்பரப்பிலிருந்து உருவான கலைஞர்கள் ஒருங்கிணைந்துள்ளதால் திணை வாசிகள் என்ற பெயரில் கண்காட்சியை நடத்துகிறோம்.
இதில் சென்னை அரசு கவின் கலைக்கல்லூரி முன்னாள் முதல்வர் சந்ரு, அவரின் நேரடி மாணவர்களான புருஷோத்தமன், மணிவண்ணன், வெங்கடேசன், நடராஜன் உள்ளிட்டோர், அவர்களுக்கு அடுத்த தலைமுறைக் கலைஞர்கள், கடந்த ஆண்டு படித்து முடித்த கலைஞர்கள் ஆகியோரின் பங்களிப்பு உள்ளது.
எங்கள் அரங்கில் கீழடி அகழாய்வு உட்பட மதுரையின் அடையாளங்கள், கிராமச் சூழல், கனவு, சமூக அவலம், பெண்களின் நிலை குறித்த ஓவியங்கள், புகைப்படங்கள், குகை ஓவியங்கள் உள்ளிட்ட சுடுமண் சிற்பங்கள், கீழடி அகழாய்வு குறித்த படங்கள், ஆவணப்படம் காட்சிப்படுத்தியுள்ளோம்.
விஞ்ஞான வளர்ச்சி, அரச பயங்கரவாதம், அழிக்கப்படும் இயற்கை வளம், சிதைக்கப்படும் வேளாண்மை குறித்துக் கவலைப்படாத கலைஞர்களுக்குக் கிடைக்கும் அங்கீகாரம், அதற்காகக் குரல் கொடுக்கும் கலைஞர்களுக்கு வழங்கப்படுவது இல்லை. இதுகுறித்தும் எங்கள் படைப்புகள் வாயிலாகப் பேசியுள்ளோம்.
மதுரையில் ஆண்டுதோறும் நடக்கும் திருவிழாக்கள் குறித்தும், அதனால் நாடோடிப் பழங்குடியினர் இனத்தவர் மதுரையில் அதிகம் இருப்பதையும் ஆவணப்படுத்தியுள்ளோம். நகரமயமாதல், கட்டடத் தொழிலாளியின் தலையில் சுமக்கும் வீடு கட்டும் கனவு, வயல் எலி பிடிக்கும் சிறுவன், பேய்க் கதைகள் சொல்லும் பாட்டி உள்ளிட்ட ஓவியங்கள் பாராட்டைப் பெற்றிருக்கின்றன.
கொச்சி பினாலே பவுண்டேஷன் நிறுவனரும் புகழ்பெற்ற ஓவியர் போஸ் கிருஷ்ணமாச்சாரி, ஒருங்கிணைப்பாளர் ஓவியர் சுபைகிரோ, ஓவியர் ரியாஸ் கோம், கேரளா லலித் கலா அகாடமி தலைவர் முரளி சேருத் உள்ளிட்டோர் தமிழக ஓவியர்களின் படைப்புகளைக் காட்சிப்படுத்த உதவியோடு வெகுவாகப் பாராட்டினார்கள்.
குறிப்பாக, கீழடி அகழாய்வில் ஈடுபட்ட கீழடி மக்களின் பங்களிப்பு குறித்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள், ஆவணப்படம் மறைக்கப்பட்ட உழைப்பை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. கீழடி அகழாய்வில் தொல்லியல் ஆய்வாளர்களுக்குப் பேருதவியாகச் செயல்பட்ட அவர்களின் வாழ்வியல் முறை குறித்தும் ஆவணப்படுத்தியிருக்கிறோம்.
மேலும், தமிழகத்தில் சமூக மாற்றத்திற்காகப் போராடிய பெரியார்போல கேரளாவில் போராடிய ஸ்ரீ நாராயணகுரு மற்றும் கேரள அடையாளமாக உள்ள தேங்காய் இரண்டையும் குறிக்கும் வகையில் சுடுமண் சிற்பம் காண்போரைக் கவர்கிறது. முத்தாய்ப்பாக தமிழகத்தின் பாரம்பரியம், பண்பாடு, அரசியல், அழகியலை உலகறிய எங்களால் ஆன பங்களிப்பைச் செய்ததில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்.