சென்னை: கரோனா அதிகரித்து வருவதால், பெரிய அளவில் பதற்றப்பட வேண்டியதில்லை. மாறாக கரோனா தொற்று ஏற்பட்டால் 5 நாட்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்வது, மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பெற்று மருந்துகள் எடுத்துக் கொள்வது போன்ற நிலையினை பொதுமக்கள் பின்பற்றிக் கொள்ள வேண்டும் என ம்ருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தமிழ்நாடு மூலிகைப் பண்ணைகள் மற்றும் மூலிகை மருந்துக் கழகம் (டாம்ப்கால்) தயாரித்துள்ள 6 அழகு சாதனப் பொருட்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிமுகம் செய்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கரோனா பாதிப்பு தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகரித்துள்ளது. கடந்த 1 மாதத்திற்கு முன்னாள் ஒற்றை இலக்கத்தில் இருந்த தொற்று பாதிப்பு தற்போது 198 என்கின்ற அளவில் உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மட்டுமல்ல இந்திய அளவில் கரோனா நோய்த் தொற்று அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. மத்திய அரசின் சார்பில் இந்த பாதிப்புகள் குறித்த சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன. அதில் தற்காத்துக் கொள்வதற்கான அறிவுறுத்தல்கள் மட்டுமே இருந்தது. ஆனால் தமிழக முதல்வர் அறிவுறுத்தலின்படி, தமிழகத்தில் ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கி அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏறத்தாழ 11,333 அரசு மருத்துவ மருத்துவமனைகள் இருக்கின்றன. இந்த அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளிகள், புறநோயாளிகள், பார்வையாளர்கள், மருத்துவர்கள், மருத்துவம் சார்ந்த களப்பணியாளர்கள் என்று அனைவருமே கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறோம். கடந்த 1-ஆம் தேதியிலிருந்து அனைத்து மருத்துவமனைகளிலும் 100% கடைப்பிடிக்கின்ற பணியினை உறுதிப்படுத்தி வருகிறார்கள். நானும் நம்முடைய துறையின் செயலாளரும் எங்கேயெல்லாம் செல்கிறமோ அங்கே எல்லாம் மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிந்திருப்பதை உறுதிப்படுத்துகிறோம்.
இந்த வகை கரோனா தொற்று மருத்துவமனைகளில் மட்டும்தான் வேகமாக பரவும் தன்மை உடையதாக இருக்கின்றது. எனவே மருத்துவமனைகளில் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் பணியில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறோம். அதையும் கடந்து பொது சுகாதாரத்துறையின் சார்பில் பேரிடர் தொடங்கிய காலம் முதல் விதிமுறைகள் ஒன்று வகுக்கப்பட்டது. தமிழகத்தில் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவிலும். அந்த விதிமுறைகள் என்பது முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது, அடிக்கடி கைகளை கழுவிக் கொள்வது அந்த விதிமுறைகள் என்பது தளர்த்தப்படவில்லை, அப்படியே நடைமுறையில் தான் இருந்து கொண்டிருக்கிறது. எனவே பாதுகாப்பு அவசியம் கருதி நாம் அந்த முகக்கவசங்களை எப்போதும் அணிந்திருப்பது தவறில்லை.
முகக் கவசங்கள் அணிவது தவறில்லை. இதனை கட்டாயப்படுத்தி அபராதம் போட்டு காவல்துறையினர் பிடித்து இப்படியெல்லாம் முகக் கவசங்கள் அணிவதை காட்டிலும், நம்மை நாம் பாதுகாத்துக் கொள்வதற்கு முகக் கவசங்கள் அவசியம் என்பதை பொதுமக்களும் உணர்ந்து அதிகம் கூட்டம் கூடும் இடங்களில் முகக் கவசங்கள் அணிந்திருத்தல் மிகவும் நல்லது. டெல்டா, டெல்டா ப்ளஸ் போலவோ மிக வேகமாக பரவி பெரிய அளவில் ஊர் ஊராக பாதிப்பு ஏற்படுத்துகின்ற நிலையில் இப்போது நோய்ப் பரவல் இல்லை.
நேற்றைய பாதிப்பு 198 என்றாலும், இது குழு பாதிப்பு என்ற அளவில் இல்லாமல் தனிமனித பாதிப்பு என்ற அளவிலேயே தான் இருக்கின்றது. அந்த வகையில் நாம் பெரிய அளவில் பதட்டப்பட வேண்டியதில்லை. அச்சப்பட வேண்டியதில்லை. அதேபோல், பாதிப்புக்குள்ளானவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு செல்லக்கூடிய அல்லது ஆக்சிஜன் வசதி கொடுக்கின்ற நிலையும் இல்லை. எனவே பெரிய அளவில் பதற்றம் கொள்ளாமல் கரோனா தொற்று ஏற்பட்டால் 5 நாட்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்வது, மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பெற்று மருந்துகள் எடுத்துக் கொள்வது போன்ற நிலையினை பொதுமக்கள் பின்பற்றிக் கொள்ள வேண்டும்.” இவ்வாறு அமைச்சர் கூறினார்.