தமிழகத்தில் தினசரி 11,000 கோவிட் பரிசோதனை: மாவட்ட வாரியாக இலக்கு நிர்ணயித்து அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் தினசரி 11 ஆயிரம் கோவிட் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட நிர்வாகங்களுக்கு சுகாதாரத் துறை இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

தமிழகத்தில் ஒற்றை இலக்கத்தில் பதிவாகி வந்த தினசரி கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை தற்போது 150-ஐ கடந்துவிட்டது. இதன் காரணமாக, அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களுக்கு வரும் நோயாளிகள், பார்வையாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ களப் பணியாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிவதை 100 சதவீதம் உறுதிப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தனியார் மருத்துவமனைகளுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் தினசரி 11 ஆயிரம் கரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட நிர்வாகங்களுக்கு சுகாதாரத்துறை இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இது தொடர்பாக தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம், அனைத்து மாவட்ட துணை இயக்குனர்களுக்கும் கடிதம் எழுதி உள்ளார். அதில், “நாடு முழுவதும் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் பிப்ரவரி மதத்தில் 50க்கு குறைவாக இருந்த தொற்று பாதிப்பு எண்ணிக்கை மார்ச் மாத இறுதியில் 689 ஆக உயர்ந்தது.

இதேபோல் தொற்று பரிசோதனையில் கரோனா உறுதி செய்யப்படுவோர் சதவீதமும் 0.6 இருந்து 3 ஆக உயர்ந்துள்ளது. பல மாவட்டங்களில் கரோனா உறுதி செய்யப்படுவோர் சதவீதமும் 5க்கு அதிகமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக திருவள்ளூர் (12.8%), கோயம்புத்தூர் (10.6%), காஞ்சிபுரம் (9.3%), கரூர் (7.8%), ஈரோடு (7.7), தூத்துக்குடி (7.1%), சென்னை (6.4%), திருவாரூர் (06%), மதுரை (5.8%) மற்றும் கடலூரில்(5.4%) கரோனா உறுதி செய்யப்படுவோர் சதவீதம் உயர்ந்துள்ளது.

எனவே, தற்போது மாநிலம் முழுவதும் 3000 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை 11 ஆயிரமாக உயர்த்த வேண்டும். மாவட்டம் தோறும் மக்கள் தொகை ஏற்ப பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று அதில் கூறியுள்ளார்.

இதனிடையே, இந்தியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரே நாளில் புதிதாக 4,435 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தொற்று பாதித்து சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 23,091 -ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு 163 நாட்களுக்கு (கடந்த ஆண்டு செப்.25க்கு பின்னர்) பிறகு கோவிட் பாதிப்பு 4,000 கடந்திருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.