சென்னை: இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் தொடர் மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.. இதனிடையே, நேற்றைய தினம் திண்டுக்கல் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது.
ஆண்டுதோறும் பிப்ரவரி இறுதியில் கொளுத்த தொடங்கும் வெயில், ஆகஸ்டு மாதம் வரை நீடிக்கும். கடந்தாண்டுகளில், அதிகபட்சமாக 112 டிகிரி அளவுக்கு வெயில் பதிவாகி இருந்தது
இந்த ஆண்டு, வெயிலின் தாக்கம் கடந்த பிப்ரவரி மாதமே அதிகரிக்க தொடங்கியது. பிப்ரவரி 15ம் தேதிக்கு பிறகு, வெயில் அளவு படிப்படியாக உயர தொடங்கியது. மார்ச் மாத தொடக்கத்திலேயே 90 டிகிரியை கடந்து சென்றது..
கோடை மழை
தினம் தினம் வெயில் வாட்டத் தொடங்கிவிட்டதால், எதிர்வரும் நாள்களில் வெயில் இன்னும் அதிகமாகும் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டே வருகிறது. இதில், தமிழகத்தில் வெயில் அதிகம் பதிவாகும் மாவட்டங்களில் வேலூர் மாவட்டம் முன்னணியில் உள்ளதால், அங்கு தினம் தினம் வெயில் கொளுத்துகிறது… அதேபோல, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த வருடம் வடகிழக்கு பருவமழை இயல்பு அளவு பெய்யாத நிலையில், அதன் பிறகும் பெரியளவு மழை பெய்யவில்லை. இப்போது கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டிருக்கிறது…
புழுக்கம்
பகல் நேர வெப்ப பதிவும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தென் மாவட்டங்களிலும் வெயில் தாக்கம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் இரவிலும் புழுக்கம் அதிகமாக உணரப்படுகிறது. குறிப்பாக கோடை வெயிலின் உச்சமாக கருதப்படும் மே மாதம் 25 நாட்கள் தொடர்ந்து கத்திரிவெயில் தாக்கம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசை காற்று மற்றும் மேற்கு திசை காற்று இரண்டும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது என்று வானிலை மையம் கூறியிருந்தது.. எனவே, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் இன்று ஓரிரு பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும் அறிவித்திருந்தது.
காரைக்கால்
நேற்றைய தினம் சென்னை வானிலை மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பில், “தென் இந்தியாவின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குகளில் மேற்கு திசை காற்றும் கிழக்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.இதனால், ஏப்ரல் 4 மற்றும் ஏப்ரல் 5ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.. ஏப்ரல் 6-ஏப்ரல் 8ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வாட்டிய வெயில்
இந்நிலையில் தமிழகத்தின் சில மாவட்டங்களில் கனமழை நேற்று பெய்துள்ளது.. சில மாவட்டங்களில் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது.. குறிப்பாக, கோவையில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் தென்பட்டது.. பிறகு நேற்று மாலையில் சூறைக்காற்றுடன் கூடிய ஆலங்கட்டி கனமழை பெய்தது.. லட்சுமி மில், காந்திபுரம், சிங்காநல்லூர், உக்கடம், சாய்பாபா காலனி, பீளமேடு உள்ளிட்ட இடங்களில் பெய்தது.. இந்த திடீர் மழையால் சாலையில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் அவதிக்கு உள்ளானார்கள்.. கடந்த சில நாட்களாகவே, வெயில் வாட்டி வதைத்த நிலையில், நேற்று திடீரென பெய்த கனமழையால் குளிர்ச்சியான சூழ்நிலை கோவையில் உருவானது.
இடி மின்னல்
அதேபோல, திண்டுக்கல்லில் வழக்கத்துக்கு மாறாக வெப்பம் அதிகரித்த நிலையில், நேற்று மாலை திடீரென சாரல் மழை பெய்தது.. பிறகு, அது கனமழையாக அரை மணி நேரம் கொட்டித் தீர்த்தது.. வடமதுரை, அய்யலூர், தாமரைப்பாடி, பில்லம நாயக்கம்பட்டி, ஜம்புலிம்பட்டி, கம்புளியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்தது.. ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மல்லி மம்சாபுரம், வன்னியம்பட்டி கிருஷ்ணன் கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.
மூஞ்சிக்கல்
இதேபோல பழனி உள்ளிட்ட பகுதிகள், ஆயக்குடி, நெய்க்காரப்பட்டி, பாலசமுத்திரம் உள்ளிட்ட இடங்களிலும் மிதமான மழை பெய்தது. இதனால் பழனி பஸ் ஸ்டாண்டு, ரயில் நிலைய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.. கொடைக்கானல் மலைப்பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழை பெய்தது. அப்சர்வேட்டரி, ஏரிச்சாலை, கீழ்பூமி, மூஞ்சிக்கல், ஆனந்தகிரி, அண்ணாசாலை, உகார்த்தேநகர், செண்பகனூர், பெருமாள்மலை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது… அதுபோலவே, சேலம் மாநகர பகுதிகளில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது.