நிலக்கரி சுரங்கம் விவகாரம்: திமுக எம்.பிக்கள் தூங்குகிறார்களா? எடப்பாடி பழனிசாமி கேள்வி!

தமிழ்நாட்டில் காவிரி டெல்டா பகுதிகளில் நிலக்கரி ஏல ஒப்பந்த நடைமுறைக்கு எதிராக சட்டப்பேரவையில் பல்வேறு கட்சி எம்.எல்.ஏக்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.

இந்த அறிவிப்பு தமிழ்நாடு அரசின் கவனத்துக்கு வராமல் வெளியிடப்பட்டுள்ளது என்றும் எக்காரணம் கொண்டும் காவிரி டெல்டாவில் இத்தகைய திட்டங்கள் செயல்படுத்தப்படாது என்று தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் உறுதி அளித்தனர்.

பின்னர் சட்டப் பேரவையிலிருந்து வெளியே வந்த எதிர்கட்சித் தலைவர்

செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “மூன்று இடங்களில் நிலக்கரி சுரங்கங்கள் தொடர்பாக தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு திமுக அரசு தான் காரணம். 2022ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி ஒரு கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய அமைச்சர் பதிலளித்தார். அப்போதே திமுக அரசு விழித்திருக்க வேண்டாமா?

இது மத்திய அரசு சம்மந்தப்பட்ட விவகாரம். இது பற்றி சட்டமன்றத்தில் பேசி பிரயோஜனம் இல்லை. நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும். திமுக கூட்டணிக்கு மக்களவையில் 38 உறுப்பினர்கள் இருக்கிறார்களே, அவர்கள் தூங்கிக் கொண்டிருக்கிறார்களா? மத்திய அரசிடம் நாடாளுமன்றத்தில் முறையிட்டு இந்த திட்டத்தை தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும்.

ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் காவிரி பிரச்சினை எழுந்த போது அப்போது அதிமுக மக்களவை உறுப்பினர்கள் 37 பேர் இருந்தார்கள். அவையை இருபது நாள்களுக்கும் மேலாக முடக்கினோம்.

அவ்வாறு செய்யாமல் பிரதமருக்கு கடிதம் எழுதினேன். லெட்டரை கொண்டு போய் கொடுத்துள்ளோம் என்று சொல்லிக் கொண்டிருப்பதில் பயன் இல்லை. நான் முதலமைச்சராக இருந்த போது எதிர்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் என்னை எதற்கெடுத்தாலும் கடிதம் தான் எழுதிக் கொண்டிருக்கிறார் என்று கூறினார். இப்போது அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்?

நானும் டெல்டா காரன் தான் இந்த திட்டத்தை அனுமதிக்க மாட்டேன் என்கிறார். ஆனால் ஸ்டாலின் துணை முதல்வராக இருந்த போதுதான் காவிரி டெல்டாவில் மீத்தேன் எடுப்பதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது” என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.