தங்கம் வாங்க ஆசைப்படாதவர்கள் யாராவது இருக்க முடியுமா என்ன… சிலர் சேமிப்பிற்காக தங்க நாணயம் வாங்குவார்கள்… சிலர் நகைகளாக வாங்குவார்கள்… சிலர் முதலீட்டு நோக்கத்திற்காக வாங்குகிறார்கள். அதுவும், வீட்டில் உபயோகமில்லாத பிளாஸ்டிக்கிற்கு பதிலாக தங்கம் கிடைக்கிறது என்றால் யார் தான் வேண்டாம் என்று சொல்வார்கள். இந்த நிலையில், பிளாச்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தும் நோக்கி இந்தியாவில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு சிறப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது.
கிராமத்தில் குப்பைக்குப் பதிலாக தங்கம் கொடுப்பதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, மக்கள் நிறைய பிளாஸ்டிக் குப்பைகளைக் கொடுத்து, அதற்குப் பதிலாக தங்கத்தைப் பெற்றுக் கொள்ள சந்தோஷமாக தயாரானார்கள். இந்தியாவில் குப்பைகளைக் கொடுப்பதற்குப் பதிலாக தங்கத்தை கொடுக்கும் திட்டம் அறிவிக்கப்பட்ட அந்த கிராமத்தில், இந்த விஷயம் அறிவிக்கப்பட்ட உடனேயே அங்குள்ள மக்கள் தானே முன் வந்து குப்பைகளை அள்ளும் நிலை உருவாகியுள்ளது.
மாசுபாட்டை சமாளிக்க திட்டம்
உண்மையில், இந்த கிராமம் தற்போது தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ளது. இந்த கிராமத்தின் பெயர் சடிவாரா என்றும், சில காலத்திற்கு முன்பு இந்த கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவர் பிளாஸ்டிக் மாசுபாட்டை சமாளிக்க இந்த தனித்துவமான பிரச்சாரத்தை தொடங்கினார். இக்கிராமத்தை பிளாஸ்டிக் மாசு இல்லாத கிராமமாக மாற்ற வேண்டும் என இக்கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர் பரூக் அகமது இதற்கு முன்னர் மேற்கொண்ட பல முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. எனினும் இம்முறை அவரது முயற்சிக்கு பலன் கிடைத்துள்ளது.
‘பிளாஸ்டிக் கொடு.. தங்கத்தை எடு’
கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர், ‘பிளாஸ்டிக் தோ அவுர் சோனா லோ’, அதாவது பிளாஸ்டிக் கழிவுகளை கொடுங்கள்… தங்கம் வாங்கிச் செல்லுங்கள் என்ற பிரச்சாரத்தைத் தொடங்கினார். இத்திட்டத்தின் கீழ், 20 குவிண்டால் பிளாஸ்டிக் கழிவுகளை யாராவது கொடுத்தால், பஞ்சாயத்து அவருக்கு தங்க நாணயம் வழங்கும். பிரசாரம் தொடங்கிய 15 நாட்களில் கிராமம் முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாத கிராமமாக அறிவிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்தப் பிரச்சாரம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
பிரபலமாகிய திட்டம்
இதைப் பார்த்து அருகில் உள்ள பல ஊராட்சிகளும் இதனை பின்பற்ற முன்வந்துள்ளனர். பல செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது, தனது கிராமத்தில் வெகுமதியாக தங்கம் வழங்கும் முழக்கத்தை ஆரம்பித்ததாகவும், அது வெற்றியடைந்ததாகவும் கூறுகிறார் பஞ்சாயத்து தலைவர். ஆறுகள் மற்றும் வாய்க்கால்களை சுத்தம் செய்ய நான் பல முன்முயற்சி எடுத்தேன், இப்போது கிராமத்தில் உள்ள அனைவரும் சுற்று புறத்தை சுத்தம் செய்ய எங்களுக்கு உதவியுள்ளனர்.