ஹைதராபாத்: வரலாறு பாடப் புத்தகத்தில் இருந்து முகலாயர்கள் பகுதி நீக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், ‘அரசாங்கம் முகலாய வரலாற்றை நீக்குகிறது; சீனா தற்போதைய வரலாற்றை அழிக்கிறது’ என்று ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி கருத்து தெரிவித்துள்ளார்.
வரும் 2023-24 கல்வி ஆண்டு முதல் கற்பிக்கப்பட இருக்கும் 12ம் வகுப்பு மாணவர்களுக்காக NCERT தயாரித்துள்ள புதிய வரலாற்று பாடப்புத்தகத்தில் இருந்து முகலாயர்களின் வரலாறு நீக்கப்பட்டதாக செய்தி நேற்று வெளியானது. அதேபோல், அருணாச்சல பிரதேசத்தை உரிமை கோரும் முயற்சியின் ஒரு பகுதியாக அங்குள்ள 11 இடங்களுக்கு சீனா கடந்த ஞாயிற்றுக்கிழமை புதிய பெயர்களை சூட்டிய செய்தியும் நேற்று வெளியானது.
இந்த இரண்டு சம்பவங்களுக்கும் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ள ஒவைஸி, இது தொடர்பாக இன்று (புதன்கிழமை) கூறியதாவது: மோடி அரசாங்கம் வரலாற்றுப் பாடநூல்களில் இருந்து முகலாய வரலாற்றை நீக்குகிறது. சீனா இந்தியாவின் தற்போதைய வரலாற்றை அழித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்தோனேசியாவில் ஜி20 மாநாட்டில் சீனத் தலைவருடன் நம் பிரதமர் கைகுலுக்கிக் கொண்டிருக்கிறார். அவர்களோ அருணாச்சலப் பிரதேசத்திலிருந்து 11 இடங்களின் பெயரை மாற்றி அரசாணை வெளியிட்டிருக்கிறார்கள்” என்று ஒவைசி காட்டமாக தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
கபில் சிபில் கண்டனம்: மாநிலங்களவை எம்.பி.யான கபில் சிபலும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இது மோடி அவர்களின் பாரதம்”. “நவீன இந்தியாவின் வரலாறு 2014ல் இருந்துதான் எழுதப்பட வேண்டும்” என்று கிண்டல் செய்திருந்தார்.
என்சிஇஆர்டி சர்ச்சையும், விளக்கமும்: முன்னதாக நேற்று NCERT-ன் இயக்குநர் தினேஷ் பிரசாத் சக்லானி அளித்தப் பேட்டியில், “12ம் வகுப்பு மாணவர்களுக்காக NCERT தயாரித்துள்ள வரலாற்று பாடப்புத்தகத்தில் இருந்து முகலாயர்கள் வரலாறு நீக்கப்பட்டதாக வெளியான தகவல் உண்மையல்ல. அது ஒரு பொய்.
கரோனா தொற்று காரணமாக மாணவர்களுக்கு ஏற்பட்ட அழுத்தத்தைக் குறைக்கும் நோக்கில் கடந்த ஆண்டு பாடத்திட்டங்களை குறைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதற்காக ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு அளித்த பரிந்துரையில், மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்குத் தேவையான பாடங்களை நீக்கக் கூடாது என்றும், சுமையாக உள்ள பகுதிகளை நீக்கலாம் என்றும் தெரிவித்தது.
தேசிய கல்விக் கொள்கையின் வழிகாட்டல்படி நாங்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். மாணவர்களுக்கான பாடச்சுமையை குறைக்க வேண்டும் என்று தேசிய கல்விக் கொள்கை கூறுகிறது. நாங்கள் அதனை அமல்பபடுத்துகிறோம். பள்ளிக் கல்விக்கான தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. அது விரைவில் இறுதி செய்யப்படும்.
தேசிய கல்விக் கொள்கையின்படி பாடப்புத்தகங்கள் 2024-ல் அச்சிடப்படும். தற்போதைக்கு நாங்கள் எதையும் கைவிடவில்லை. முகலாயர்களின் வரலாற்றை பாடப் புத்தகத்தில் இருந்து NCERT நீக்கவிட்டதாக எழுந்துள்ள விவாதம் தேவையற்றது. இது குறித்து தெரியாதவர்கள், பாடப் புத்தகத்தைப் பார்த்துக்கொள்ளலாம்” என்று தெரிவித்திருந்தார்.