நியூசிலாந்து பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்த ஜெசிந்தா ஆர்டனுக்கு, புதிய பொறுப்பு ஒன்றை வழங்கி கௌரவித்துள்ளார் பிரித்தானிய இளவரசர் வில்லியம்.
திறமைவாய்ந்த இளம் பிரதமர்
ஜெசிந்தா ஆர்டெர்ன், உலக வரலாற்றில் பிரதமர் பதவி வகித்த இளம் வயது பெண் என்ற அந்தஸ்தைப் பெற்றவராவார். 2017ல் பிரதமராக பதவியேற்கும்போது அவருக்கு வயது 37 மட்டுமே. அவர் கொரோனா பெருந்தொற்று சவாலை திறம்பட எதிர்கொண்டார். பொருளாதார மந்தநிலை, க்ரைஸ்ட்சர்ச் துப்பாக்கிச் சூடு, ஒயிட் தீவு எரிமலை வெடிப்பு என பல சவால்களை அவர் தனது பதவிக்காலத்தில் சந்திக்க நேர்ந்தது.
ஆனால், இவ்வளவு திறமையான பிரதமர் என பலராலும் புகழப்பட்ட ஜெசிந்தா, ஜனவரி மாதம் ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
GETTY IMAGES
’நான் எனது பணிக்காலத்தில் அந்தப் பதவியின் வாயிலாக செய்ய நினைத்த விடயங்களை துரதிர்ஷ்டவசமாக என்னால் செய்ய முடியவில்லை.
ஆகவே, நான் இனிமேலும் அப்பதவியில் தொடர்வது அந்தப் பதவிக்கு பொருந்தாது’ என்று கூறி ராஜினாமா செய்தார் ஜெசிந்தா.
ஆனால், அவர் ராஜினாமா செய்ததற்காகவும் புகழப்பட்டார்!
இளவரசர் வில்லியம் கொடுத்துள்ள புதிய பொறுப்பு
இந்நிலையில், பிரித்தானிய இளவரசரும், வருங்கால மன்னருமான இளவரசர் வில்லியம், ஜெசிந்தாவுக்கு புதிய பொறுப்பொன்றைக் கொடுத்துள்ளார்.
Earthshot Prize என்னும் சுற்றுச்சூழலுக்கான விருதொன்றை உருவாக்கியவர்களில் ஒருவர் இளவரசர் வில்லியம். பின்னர், அது ஒரு தொண்டு நிறுவனமாக மாற்றப்பட்டது. சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போருக்கு இந்த விருது வழங்கப்படும்.
தற்போது, Earthshot Prize தொண்டு நிறுவனத்தின் அறங்காவலர்களில் ஒருவராக ஜெசிந்தாவுக்கு பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ஜெசிந்தா மீது பெரிதும் மரியாதை கொண்டவரான வில்லியம், பிரித்தானிய மகாராணியார் இரண்டாம் எலிசபெத் மறைந்த நேரத்தில், தான் வகிக்கவேண்டிய முக்கிய பொறுப்பொன்றை ஜெசிந்தாவுக்கு வழங்கினார்.
KENSINGTON PALACE/REUTERS
ஐக்கிய நாடுகள் பொதுச்சபை தொடர்பான நிகழ்ச்சிகளில் ஒன்றான, Earthshot Prize innovation summit என்னும் சுற்றுச்சூழல் தொடர்பான நிகழ்ச்சியில், தனக்கு பதிலாக பங்கேற்குமாறு இளவரசர் வில்லியம் தனிப்பட்ட முறையில் அப்போது நியூசிலாந்து பிரதமராக இருந்த ஜெசிந்தாவைக் கேட்டுக்கொண்டார்.
அப்போது, வில்லியமுடைய வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட ஜெசிந்தா, தனது உரையின்போது, மிகவும் தாழ்மையுடன், நான் பிரித்தானிய இளவரசருக்கு எந்த வகையிலும் இணையில்லை என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.