கர்நாடக சட்டமன்ற தேர்தல் 2023 தான் தேசிய அளவில் தினசரி தலைப்பு செய்தி. வரும் மே 10ஆம் தேதி வாக்குப்பதிவும், மே 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடத்தப்படுகிறது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 113 இடங்களை கைப்பற்றும் கட்சியே தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியை கைப்பற்றும். இம்மாநிலத்தில் பாஜக,
காங்கிரஸ்
, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவில் ரெய்டு
வேட்பாளர்கள் அறிவிப்பு, பிரச்சார வியூகம், தேசிய தலைவர்கள் வருகை என மாறி மாறி செய்திகள் வெளிவந்த நிலையில் திடீர் ரெய்டு நடவடிக்கைகள் பரபரப்பை கூட்டியுள்ளன. இது ஆளுங்கட்சியான பாஜகவின் வியூகம் என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. சமீபத்தில் வெளியான பல்வேறு கருத்துக்கணிப்பு முடிவுகளில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸிற்கு வெற்றி வாய்ப்பு
இதனால் காங்கிரஸின் வெற்றி வாய்ப்பை தடுக்கும் வகையில் ரெய்டு அஸ்திரங்களை பாஜக ஏவுவதாக புகார் கூறப்பட்டு வருகிறது. குறிப்பாக காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக செயல்படும் தொழிலதிபர்கள், அரசியல் புள்ளிகள் உள்ளிட்டோரை குறிவைத்து வருமான வரித்துறை, அமலாக்கத்துறை அதிரடி சோதனையில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
தயங்கும் பாஜகவினர்
இதுதொடர்பாக பேசிய அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் கர்நாடக மாநில பொறுப்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, எங்களிடம் ஆதாரங்கள் இருக்கின்றன. எங்கள் மீதான ரெய்டு நடவடிக்கைகளுக்கு காரணம் பாஜக தான். அந்த கட்சியில் அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும் மீண்டும் போட்டியிட தயங்கி வருகின்றனர். கர்நாடக பாஜகவில் இருந்து பலர் வெளியேறும் எண்ணத்தில் உள்ளனர்.
அடுத்தடுத்து ராஜினாமா
சமீபத்தில் மட்டும் 10 எம்.எல்.ஏக்கள், எம்.எல்.சிக்கள், முன்னாள் எம்.எல்.ஏக்கள், முன்னாள் எம்.எல்.சிக்கள், வாரிய மற்றும் மாநகராட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸில் இணைந்துள்ளனர். இதனை பாஜகவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. வெற்றியும் எங்கள் பக்கமே உள்ளதாக தெரிவித்தார்.
ஐடி, அமலாக்கத்துறை அதிகாரிகள்
மேலும் கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே.சிவக்குமார் கூறுகையில், காங்கிரஸ் கட்சியினர் தான் குறிவைக்கப்பட்டுள்ளனர். இதற்காக நூற்றுக்கணக்கான வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கர்நாடகாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூலம் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மிரட்டப்பட்டு வருகின்றனர்.
2வது வேட்பாளர் பட்டியல்
இதற்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம் எனக் கூறியுள்ளார். இதேபோல் முன்னாள் முதல்வர் சித்தராமையா கூறுகையில், கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமான சூழல் உண்டாகியுள்ளது. ஆட்சியை இழந்து விடுவோம் என்ற அச்சத்தில் பாஜக இருக்கிறது. ஆனால் ஒரு காங்கிரஸ் தலைவர் கூட பயப்பட மாட்டார்கள் என்றார்.
ஏற்கனவே முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுவிட்டது. இரண்டாவது வேட்பாளர் பட்டியல் கட்சி மேலிடத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. விரைவில் வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் பாஜக தரப்பில் தான் சுணக்கம் ஏற்பட்டிருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.