புதுடில்லி, சி.பி.ஐ., அமலாக்கத் துறை போன்ற மத்திய விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதை தடுத்து நிறுத்தக் கோரி, காங்கிரஸ் உட்பட ௧௪ கட்சிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.
‘அரசியல்வாதிகளும், சாதாரண குடிமக்களே; அவர்களுக்கு சிறப்பு சலுகை காட்ட முடியாது’ என உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
காங்கிரஸ் உட்பட, ௧௪ எதிர்க்கட்சிகள் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது.
காங்கிரசைத் தவிர, தி.மு.க., ராஷ்ட்ரீய ஜனதா தளம், பாரத் ராஷ்ட்ரீய சமிதி, திரிணமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, தேசியவாத காங்கிரஸ், சிவசேனா உத்தவ் பாலசாகேப் தாக்கரே, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ஐக்கிய ஜனதா தளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், சமாஜ்வாதி, தேசிய மாநாட்டுக் கட்சி ஆகியவையும் இணைந்து இந்த வழக்கை தொடர்ந்துள்ளன.
சி.பி.ஐ., அமலாக்கத் துறை போன்ற மத்திய விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாகவும், எதிர்க்கட்சியினரை குறிவைத்து அதிக வழக்குகள் தொடர்வதாகவும், இதுபோன்ற வழக்குகளில் கைது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு ஒரு வழிகாட்டுதல்களை உருவாக்கக் கோரியும், இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி ஜே.பி.பர்திவாலா அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, எதிர்க்கட்சிகள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.எம். சிங்வி வாதிட்டதாவது:
மத்தியில் பா.ஜ., தலைமையிலான அரசு அமைந்தபின், அமலாக்கத் துறை மற்றும் சி.பி.ஐ., சார்பில் தொடரப்படும் வழக்குகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதுவரை, ௧௨௪ அரசியல்வாதிகள் மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதில், ௧௦௮ பேர் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள். அதாவது, ௯௫ சதவீதம் பேர் எதிர்க்கட்சியினர். அரசியல் நோக்கத்துக்காக இந்த வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்த அமைப்புகள் வாயிலாக கைது செய்வது, வழக்குகள் பதிவு செய்வதற்கு என, வழிகாட்டுதல் நெறிமுறைகளை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
இதையடுத்து, அமர்வு கூறியதாவது:
ஒரு வழக்கின் உண்மை தன்மை குறித்து தெரியாமல், பொதுவான வழிகாட்டுதல்களை வகுப்பது ஆபத்தானது. மக்களின் குறைகளை கேட்கும் அரசியல்வாதிகளின் குறைகளை கேட்க நீதிமன்றங்கள் தயாராக உள்ளன.
அதே நேரத்தில், சாதாரண மக்களுக்கு இல்லாத சிறப்பு சலுகையை அரசியல்வாதிகளுக்கு வழங்க முடியாது. அவ்வாறு சிறப்பு சலுகை வழங்குவது, நீதி நடைமுறைக்கு எதிரானதாக அமைந்துவிடும்.
ஒரு தனிப்பட்ட வழக்கில் அல்லது குழுவான வழக்குகளில் பிரச்னை இருந்தால், நீதிமன்றங்களை அணுகலாம்.
இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.
இதையடுத்து, மனுவைத் திரும்பப் பெறுவதாக சிங்வி தெரிவித்தார். மனு திரும்பப் பெறப்படுவதால், அதை தள்ளுபடி செய்வதாக அமர்வு அறிவித்தது.