மூவரசம்பட்டு குளத்தில் மூழ்கி 5 பக்தர்கள் உயிரிழப்புக்கு பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் இரங்கல் செய்தியில், “சென்னை பல்லாவரத்தை அடுத்த மூவரசம்பட்டு தர்மலிங்கேசுவரர் கோயில் தெப்பக்குளத்தில் இன்று நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியின் போது 5 பக்தர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கோயில் குளத்தில் ஆழம் அதிகம் என்றும், இந்த நிகழ்ச்சி குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
ஆனால், அதையும் கடந்து தீர்த்தவாரி நடைபெற்ற நிலையில், தீயவிப்புத் துறை மற்றும் காவல்துறையினர் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காதது தான் விபத்துக்கு காரணம் ஆகும்.
இனி வரும் காலங்களிலாவது இத்தகைய நிகழ்ச்சிகளின் போது விபத்துகள் நடக்காத வகையில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதன் மூலம் அப்பாவி மக்கள் உயிரிழப்பது தவிர்க்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.