சென்னை: Bayilvan Ranganathan On Ajith (அஜித் குறித்து பயில்வான் ரங்கநாதன்) அஜித்துக்கு ஸ்பான்சர் இல்லாததால்தான் அவர் பைக் ரேஸிலிருந்து விலகிவிட்டார் என பயில்வான் ரங்கநாதன் தெரிவித்திருக்கிறார்.
தமிழின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். அமராவதி படம் மூலம் அறிமுகமான அவர் இதுவரை 61 படங்களில் நடித்திருக்கிறார். அதில் வெற்றியையும், தோல்வியையும் சரிசமமாக பார்த்திருக்கிறார். கடைசியாக அவர் ஹெச்.வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் வங்கிக்கொள்ளையை வைத்தும், வங்கிகள் மக்களிடம் ஆடும் தகிடு தத்தங்களை வைத்தும் எடுக்கப்பட்டிருந்ததால் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமர்
துணிவு படம் கொடுத்த வெற்றியால் அஜித்துக்கு உற்சாகம் அதிகளவு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே அடுத்த படத்தையும் எப்படியாவது வெற்றிப்படமாக கொடுத்துவிட வேண்டும் என்பதில் தீவிர முனைப்போடு இருக்கிறார். முதலில் அந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. திடீரென அவர் கழற்றிவிடப்பட படத்தை இயக்குவதற்கு மகிழ் திருமேனி கமிட்டாகியிருக்கிறார். ஆனால் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. அதேசமயம் அஜித்தின் பிறந்தநாளான மே 1ஆம் தேதி படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு பக்கா ப்ரோமோவுடன் வெளியாகும் என கூறப்படுகிறது. இதனால் மே 1ஆம் தேதிக்கு அஜித் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
பக்கா ரேஸ் பிரியர் அஜித்குமார்
முன்னணி கதாநாயகனாக அஜித்குமார் இருந்தாலும் அவருக்கு ரேஸ் மீது தீராத ஆர்வம் இருந்தது உண்டு. கார் ரேஸ், பைக் ரேஸ் போட்டிகளில் அவர் கலந்துகொண்டு சில பரிசுகளையும் வென்றிருக்கிறார். ஆனால் அஜித்குமார் தனது திரையுலக வாழ்க்கையில் சந்தித்த சறுக்கலுக்கு முக்கியமான காரணமாக பார்க்கப்படுவது ரேஸ்கள்தான். ஏனெனில் அதில் கவனம் செலுத்தி அவர் திரைப்படங்களில் கவனம் செலுத்த முடியாமல் திணறினார். அதேபோல் பந்தயங்களில் பங்கேற்ற அவருக்கு விபத்துகள் ஏற்பட்டு அறுவை சிகிச்சைகளும் நடந்தன என்பது குறிப்பிடத்தக்கது. ஒருகட்டத்தில் சுதாரித்துக்கொண்ட அஜித் ரேஸிலிருந்து முழுவதுமாக ஒதுங்கிக்கொண்டார்.

அஜித் பற்றி பற்றவைத்த பயில்வான் ரங்கநாதன்
இந்நிலையில் திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டார் நடிகரும், பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன். அப்போது அஜித்தின் ரேஸ் வாழ்க்கை குறித்து பேசிய அவர், “அஜித் ரேஸராக இருந்தபோது அவருக்கே ஸ்பான்சர் இல்லை. ஸ்பான்சரை பிடிக்க முடியாமல்தான் அஜித்குமார் தனது ரேஸ் வாழ்க்கையை முடித்துக்கொண்டார்” என்றார். பயில்வானின் இந்த கருத்துக்கு அடுத்து, அஜித்குமார் இந்தியாவே அறியப்படும் நடிகர் ஆவார். அவருக்கா ஸ்பான்சர் கிடைத்திருக்கமாட்டார்கள்.தனது உடல்நலன் கருதியும், தனது ரசிகர்களுக்காகவும் மட்டும்தான் அஜித் ரேஸிலிருந்து ஒதுங்கினாரே தவிர ஸ்பான்சர் கிடைக்காமல் இல்லை. பயில்வான் ரங்கநாதன் தொடர்ந்து இதுபோன்ற அவதூறு செய்திகளை பரப்பி வருகிறார். அவர் இதனை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என அஜித் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.