DCvsGT: வார்னரின் டெஸ்ட் இன்னிங்ஸிற்கு எண்டே இல்லையா? – டெல்லியின் தொடர் தோல்விக்குக் காரணம் என்ன?

`தொடரும்’ படத்தில் வடிவேலு அடித்துப்பிடித்து ஒரு வேலை வாங்குவார். ஆனால் யாராவது ஏதாவது செய்யப்போக அது கடைசியாய் வடிவேலு தலையில் விடிந்து அடிக்கடி மெடிக்கல் லீவில் போவார். அப்படித்தான் இருக்கிறது இந்த ஆண்டு ஐ.பி.எல். அடித்துப்பிடித்து வாங்கிய வீரர்கள் எல்லாம் காயம்பட்டு வெளியேறிக்கொண்டே இருக்கிறார்கள். இந்த சீசனில் நடந்த ஆட்டங்களில் விழுந்த விக்கெட்களை விட சீசன் தொடங்கிய பின் வெளியேறிய வீரர்கள் அதிகம் இருப்பார்கள் போல. கிரிக்கெட் வாரியங்கள் தங்கள் வீரர்களின் உடல்நலனில் அதிக கவனம் செலுத்தவேண்டிய நேரம் இது.

அப்படி காயத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட இரண்டு அணிகள் மோதிய போட்டி நேற்று. குஜராத்தின் மிடில் ஆர்டரில் நிலைத்தன்மை வேண்டுமென்பதற்காகவே ஏலத்தில் எடுக்கப்பட்ட கேன் மோசமான காயம் காரணமாக நியூசிலாந்து போய்விட்டார். இன்னொருபக்கம் பன்ட் வெற்றிடத்தால் நங்கூரம் இல்லாத கப்பலைப் போல தத்தளிக்கிறது டெல்லி.

டேவிட் வார்னர் – ஹர்திக் பாண்ட்யா

ஹோம் கிரவுண்டில் டெல்லிக்கு இது முதல் மேட்ச். என்னதான் ஹோம் கிரவுண்டாக இருந்தாலும் பிட்ச் தனக்குள் என்ன ரகசியத்தை மறைத்துவைத்திருக்கிறது என்பது ஹோம் டீம் வீரர்களுக்கே முதல் போட்டியின் முன் வரை துல்லியமாய்த் தெரியாது. இதைத்தான் சென்னை – லக்னோ போட்டியின்போது தோனியும் சொன்னார். சில நேரங்களில் ‘பாசம் வைக்க நேசம் வைக்க’ என நமக்குச் சாதகமாய் தோள் மீது கைபோடும். சில நேரங்களில் ‘தீபாவளி பரிசு காத்திருக்கிறது’ என முத்து படத்தில் வருவது போலவே நம்மை சுற்றவிட்டு அடிக்கும். நேற்று டெல்லிக்கு நடந்தது இதில் இரண்டாவது.

பாண்ட்யா தான் டாஸ் ஜெயித்தார். பவுலிங்கையும் தேர்வு செய்தார். குஜராத் அணியில் வில்லியம்சனுக்கு பதிலாக டேவிட் மில்லர், விஜய் ஷங்கருக்கு பதில் சாய் சுதர்சன். டெல்லியில் சர்ஃப்ராஸின் கீப்பிங் க்ளவுஸுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு முழுநேர கீப்பரான அபிஷேக் பொரேலை எடுத்திருந்தார்கள். ரோவ்மன் பவ்லுக்கு பதில் நோர்க்கியா.

ஓப்பனிங் வார்னரும் ப்ருத்வி ஷாவும். வார்னரும் சமீப காலத்திய ஸ்ட்ரைக் ரேட் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. இந்த சீசனில் இழப்பதற்கு இனி ஒன்றுமில்லை என டேர்டெவில் போல ஆடுவார் என்றுதான் எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆனால் கேப்டன்ஷிப் பிரஷர், பழைய சுவர் பெயின்ட் போல பொலபொலவென உதிரும் மிடில் ஆர்டர் ஆகியவற்றால் இந்த முறையும் நிதானமாகவே ஆடிவருகிறார்.

நாளுக்கு நாள் பவர்ப்ளேயில் ஆபத்தான பவுலராகி வருகிறார் ஷமி. முதல் ஓவரில் வார்னரை நன்றாகவே தடுமாறவிட்டார். தேவையே இல்லாத எக்ஸ்ட்ரா காரணமாக 11 ரன்கள். அந்த ஒரு பந்தைத் தவிர்த்து பார்த்தால் ஸ்விங் பவுலிங் பழகுபவர்களுக்கான பாலபாடம் அது. லிட்டிலின் இரண்டாவது ஓவரில் ஒன்பது ரன்கள். தன் அடுத்த ஓவரையும் எக்ஸ்ட்ராவோடே தொடங்கினார் ஷமி. அடுத்த பால் ஷாவிற்கு லேசாக டைமிங் மிஸ்ஸாக நான்கு ரன்கள். ஆனால் இரண்டு பந்துகள் கழித்து பலமாகவே மிஸ்ஸானது டைமிங். விளைவு மிட் ஆனில் அல்ஸாரியிடம் கேட்ச்.

டேவிட் வார்னர்

ஒருபக்கம் டெஸ்ட் பவுலரான ஷமி டி20யில் எப்படி ஸ்விங் செய்வது என இளையவர்களுக்கு கற்றுக்கொடுத்துக்கொண்டிருக்க, மறுபக்கம் டி20யில் எப்படி டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடுவது என பாடமெடுத்துக்கொண்டிருந்தார் வார்னர்.

பாவம் அவரால் பந்தைக் கணிக்கவே முடியவில்லை. மிட்ச்சல் மார்ஷும் ஷமியின் ஸ்விங்கில் சிக்கி வெளியேற பவர்ப்ளே முடிவில் ஸ்கோர் 52/2. நல்ல ஸ்கோர்தானே என்கிறீர்களா? அதில் 14 ரன்கள் எக்ஸ்ட்ரா. வார்னரின் ஸ்கோர் 22 பந்துகளில் 25 ரன்கள்.

ஒன்பதாவது ஓவரில் வார்னரின் சோகத்திற்கு முடிவு கட்டினார் அல்ஸாரி. அதே மோசமான டைமிங் காரணமாக இன்சைட் எட்ஜ். மார்வெலுக்கு ரூஸோ பிரதர்ஸ்ன்னா கேப்பிடல்ஸுக்கு இந்த ரைலி ரூஸோதான் என ரசிகர்கள் நம்பிக்கொண்டிருக்க, அந்த ரூஸோவோ வந்த வேகத்தில் திவேதியாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஸ்கோர் 9 ஓவர்கள் முடிவில் 70/4. இன்னும் 66 பந்துகளை சந்திக்கவேண்டுமென்பதால் சர்ஃப்ராஸ் பொறுமையாகவே ஆட, அபிஷேக் மட்டும் தன் இருப்பை நிரூபிக்க அதிரடி காட்டினார். அடுத்த மூன்று ஓவர்களில் மட்டும் முப்பது ரன்கள். அதில் அபிஷேக்கின் கணக்கு 20. அதற்கு குஜராத் பீல்டர்களும் நன்றாய் உதவி செய்தார்கள். மூன்று கேட்ச் கோட்டைவிட்டார்கள்.

இது சரிப்படாது என தன் ஆயுதமான ரஷித்தை இறக்கினார் பாண்ட்யா. அபிஷேக்கின் அனுபவமின்மை வெளிப்பட்டது அங்கே. ஃப்ரன்ட் ஃபுட்டில் சுற்ற கேப்பில் ஸ்ட்ம்ப்பை பொளந்தார் ரஷித். நல்ல ஃபார்மில் இருக்கும் அக்‌ஷர் வந்தவுடனே ஒரு பவுண்டரி அடித்து தொடங்கினார். ஆனாலும் மறுபக்கம், புயலுக்கு அசராத போஸ்ட் கம்பம் போல சர்ஃப்ராஸ் அலட்டிக்கொள்ளவே இல்லையென்பதால் ஸ்கோர் ஏறுவேனா என்றது. அடுத்த நான்கு ஓவர்களில் 25 ரன்கள்தான். இடையில் ரஷித்தே பாவம் பார்த்து சர்ஃப்ராஸை பெவிலியன் அனுப்பி வைத்தார்.

அக்ஷர் படேல்

34 பந்துகளில் 30 ரன்கள். கடைசிவரை அக்‌ஷர் மட்டும் போராடி ஸ்கோரை 162 வரை இழுத்துவந்தார். அவரின் பங்களிப்பு 22 பந்துகளில் 36 ரன்கள்.

இந்த சீசனின் குறைந்தபட்ச ஸ்கோர் இது. சர்ஃப்ராஸ் கானுக்கு பதில் இம்பேக்ட் பிளேயராய் கலீல் அகமதை கொண்டுவந்தார் வார்னர். எந்தப் பயனுமில்லை. டெக்ஸ்ட் புக் ஷாட்கள் ஆடியே 14 ரன்கள் சேர்த்தார் சாஹா. முகேஷின் அடுத்த ஓவரில் கில்லும் அதையே செய்ய 8 ரன்கள். மூன்றாவது ஓவர் வீச இந்த ஐ,பி.எல்லில் முதல் முறை என்ட்ரி கொடுத்தார் நார்க்கியா. முதல் பந்திலேயே ஸ்டம்ப் தெறித்தது. ஒன்டவுனில் களமிறங்கியது தமிழக வீரர் சாய் சுதர்சன். வில்லியம்சன் இடத்தில் சுதர்சனை இறக்குகிறார்கள் என்றால் அணி நிர்வாகம் அவரை அவ்வளவு நம்புகிறது என அர்த்தம். அதை அப்படியே காப்பாற்றினார் சுதர்சன்.

நார்க்கியாவின் அடுத்த ஓவரில் அதே போல கில்லின் ஸ்டம்ப்பும் தெறித்தது. சீனியர் பிளேயர்களே தடுமாறிய நார்க்கியாவின் பந்தில் ஸ்கூப் ஷாட் சிக்ஸ் எல்லாம் அடித்து `எனக்கு பயமில்ல, அதுக்கு இதான் சாம்பிள்’ எனக் காட்டினார் சுதர்சன். மறுபக்கம் ஹர்திக்கும் வந்த வேகத்திலேயே கிளம்ப, களமிறங்கியது விஜய் ஷங்கர். தமிழர்களின் கூட்டணியில் தப்பிப் பிழைத்தது குஜராத்.

நார்க்கியா

வசதியான பந்துகளை மட்டும் அடித்து, ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்து ரன்ரேட் குறையாமல் பார்த்துக்கொண்டார்கள். இதனால் ஸ்கோரும் சீராக ஏறியது. 53 ரன்கள் பார்ட்னஷிப்பிற்குப் பிறகு ஷங்கரின் மோசமான ஃபுட்வொர்க்கை சாதகமாக்கி அவரை வெளியே அனுப்பினார் மிட்ச் மார்ஷ். ஸ்கோர் 112/4, 14 ஓவர்களில். குல்தீப்பின் அடுத்த ஓவரில் ஐந்தே ரன்கள். பிரஷர் குஜராத் பக்கம் எகிற, ‘அதான் நான் இருக்கேன்ல’ என முகேஷ் வீசிய அடுத்த ஓவரில் இரண்டு சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாசினார் மில்லர். அதற்கடுத்த ஓவரில் சுதர்சனும் தன் பங்கிற்கு சிக்ஸும் பவுண்டரியும் அடிக்க, மொத்தமாய் 34 ரன்கள் வந்தது இரண்டு ஓவர்களில். மிச்ச சொச்சத்தையும் அவர்கள் தங்களுக்குள் முடித்துக்கொள்ள பதினோரு பந்துகள் மிச்சமிருக்கும்போதே முடிந்தது மேட்ச். 48 பந்துகளில் 68 ரன்கள் எடுத்த சாய் சுதர்சன் தான் ஆட்டநாயகன்.

சாய் சுதர்சன்

சேஸிங் செய்த 11 ஆட்டங்களில் பத்தில் வென்றிருக்கிறது குஜராத். பெரும்பாலும் மிடில் ஓவர்களிலேயே தன் கோட்டாவை முடித்துவிடுகிற ரஷித்த டெத் ஓவர் போடவைப்பது போன்ற சுவாரஸ்யமான முடிவுகளை எடுக்கிறார் பாண்ட்யா. மறுபக்கம் ‘இவங்களை அடிச்சா போதும், ரெண்டு மேட்ச் கையில’ என மற்ற அணிகள் யோசிக்குமளவிற்கு எல்லா ஏரியாவிலும் வீக்காக காட்சியளிக்கிறது டெல்லி. தன் ஃபார்மை நிரூபிப்பது, இருப்பவர்களை வைத்து சிறந்த அணியை ஒன்றிணைப்பது, அந்த அணியை வெற்றிக்கு வழிநடத்துவது என எக்கச்சக்க பொறுப்புகள் வார்னர் தலைமீது. தாங்குவாரா பார்ப்போம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.