Doctor Vikatan: மாதவிடாயின்போது ஏற்படும் அதீதமான வயிறு மற்றும் முதுகுவலிக்கு என்னதான் தீர்வு? ஒவ்வொரு மாதமும் அந்த வலி நரக வேதனையைத் தருகிறது. பெயின் கில்லர் போடாமல் சமாளிக்க முடியவில்லை. வீட்டு வைத்தியமோ, உடற்பயிற்சியோ உதவுமா? பீரியட்ஸின்போது உடற்பயிற்சிகள் செய்தால் உடல்வலி குறைய வாய்ப்பு உள்ளதா?
பதில் சொல்கிறார் சேலத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ்.
கர்ப்பப்பை தன் திசுக்களை, கழிவாக வெளியேற்றுவதற்காக சுருங்கி விரியும். அந்த நேரத்தில் புராஸ்டோகிளாண்டின் எனப்படும் வலிக்கான ஹார்மோனும் சற்று அதிகம் சுரக்கும். அதுதான் மாதவிடாயின்போது ஏற்படும் வலிக்கு காரணம்.
சில பெண்களுக்கு இந்த வலி தாங்க முடியாததாக இருக்கும். அவர்களுக்கு ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் எப்படியிருக்கிறது, பீரியட்ஸின்போதான உதிரப்போக்கின் தன்மை எப்படியிருக்கிறது, முறைதவறிய மாதவிடாய் இருக்கிறதா, ரத்தப்போக்கு அதிகமாக இருக்கிறதா என்ற விஷயங்களை எல்லாம் கவனிக்க வேண்டும்.
பீரியட்ஸ் நாள்களில் அவர்களுக்கு எந்த அளவுக்கு ஓய்வு கிடைக்கிறது என்பதையும் பார்க்க வேண்டும். இவற்றைத் தாண்டி இந்த வலியின் பின்னால் மருத்துவ காரணங்களும் இருக்கலாம். அதாவது ஃபைப்ராய்ட்ஸ், எண்டோமெட்ரியாசிஸ் போன்ற பிரச்னைகள் இருந்தால் அதற்கான அறிகுறியாகவும் வலி இருக்கலாம்.
ஒவ்வொரு மாதமும் இப்படி வலி இருக்கும்பட்சத்தில் மகப்பேறு மருத்துவரை சந்தித்து பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். மருத்துவ ரீதியான காரணங்கள் இல்லை என்று உறுதிசெய்யப்பட்டால் அடுத்து வலியைக் குறைப்பதற்கான மாற்றுவழிகளை யோசிக்கலாம். அதாவது மருத்துவ சிகிச்சைகள் தேவைப்படாத வழிகள்.
நம் உடலின் ஆரோக்கியத்துக்கு தயாமின் எனப்படும் வைட்டமின் பி, மக்னீசியம், இரும்புச்சத்து போன்றவை அவசியம் தேவை. முருங்கைக்கீரையில், ஆட்டின் ஈரல் போன்றவற்றில் இரும்புச்சத்து அதிகம் இருக்கும். மக்னீசியம் அதிகமுள்ள பாதாம், முந்திரி, சூரியகாந்தி விதைகள், வாழைப்பழம், மீன், கீரைகள் போன்றவற்றைச் சேர்த்துக்கொள்வதன் மூலம் வலி குறையும். சர்க்கரைச்சத்து குறைவாக உள்ள டார்க் சாக்லேட்டிலும் மக்னீசியம் இருப்பதால், அதுவும் வலியைக் குறைக்க உதவும்.
மாதவிடாயின்போது உடற்பயிற்சிகள் செய்யலாமா என்பது சம்பந்தப்பட்ட பெண்ணின் உடல்நிலையைப் பொறுத்தது. சிலருக்கு இந்த நாள்களில் பயிற்சி செய்வதால் வலி குறைவதாக உணரலாம். உடற்பயிற்சியின்போது ரத்த ஓட்டம் உடல் முழுவதும் சீராகப் பரவுவதாலும், மனநலம் மேம்படுவதாலும் வலி குறையும். சிலருக்கு பீரியட்ஸ் நாள்களில் ஓய்வு அவசியப்படலாம். அதற்காக படுத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. மூச்சைப் பிடித்துக்கொண்டு செய்கிற வேலைகள் வலியை அதிகரிக்கலாம் என்பதால் அப்படிப்பட்ட வேலைகளைத் தவிர்க்கலாம்.
அளவோடு செய்யப்படுகிற உடற்பயிற்சியால் வலி ஓரளவுக்கு குறையும். இது தவிர, வீட்டிலேயே அடிவயிற்றுக்கு வெந்நீர் ஒத்தடம் கொடுக்கலாம். மசாஜ் தேவையில்லை. இதையும் மீறி வலியை உணர்பவர்களுக்கு டிரான்ஸ்கியூடேனியஸ் எலக்ட்ரிகல் நர்வ் ஸ்டிமுலேஷன் (Transcutaneous electrical nerve stimulation (TENS) என்றொரு சிகிச்சை இருக்கிறது. மருந்துகள் தேவையில்லை, ஆனால், வலியிலிருந்து நிவாரணம் வேண்டும் என்போருக்கான சிகிச்சை இது.
அல்ட்ரா சவுண்ட் போன்ற எதையும் பீரியட்ஸ் நாள்களில் மருத்தவர்கள் ஊக்கப்படுத்த மாட்டார்கள். ஆனால், டிரான்ஸ்கியூடேனியஸ் எலெக்ட்ரிகல் நர்வ் ஸ்டிமுலேஷன் சிகிச்சை மட்டும் விதிவிலக்கு. மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பிறகு, இந்தச் சிகிச்சையை வீட்டிலேயேகூட செய்துகொள்ளும்படி மருத்துவர்கள் வழிகாட்டுவார்கள். இதன் மூலம் வலியில்லாமல் பீரியட்ஸை கடக்கலாம். ஆனால், இந்தச் சிகிச்சைகள் எதற்குமே வலி கட்டுப்படவில்லை என்றால், மருத்துவரிடம் முறையான ஆலோசனை பெற்று சரியான சிகிச்சை எடுக்க வேண்டியது அவசியம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.