இந்தியாவின் அதிவேக மற்றும் சொகுசு ரயில் என்ற பெருமையை பெற்றுள்ள வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்க்கு அடுத்தடுத்து சோதனை காலமாக அமைந்து கொண்டிருக்கிறது. பல கோடி ரூபாய் மதிப்பில் மிகவும் கடின உழைப்பிற்கு மத்தியில் உள்நாட்டு தயாரிப்பாக பயன்பாட்டிற்கு வந்துள்ள ரயில் மீது ஏன் இந்த வன்மம்? என்று தான் கேட்க தோன்றுகிறது. மாறி மாறி கல் வீசி தாக்குதல் நடத்தி வருவதை எப்படி புரிந்து கொள்வது.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
ஒருமுறை அல்ல. இது மூன்றாவது முறை. பெரும் விபத்து நேர்ந்திருந்தால் என்ன செய்வது? பயணிகளுக்கு ஏதாவது ஆகியிருந்தால் என்ன செய்வது? போன்ற கேள்விகள் எழுவதை மறுப்பதற்கில்லை.
இனி விஷயத்திற்கு வருவோம். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் முதல் செகந்திராபாத் வரை 698 கிலோமீட்டர் தூரத்தை கடக்கும் வகையில் இந்தியாவின் 8வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த ஜனவரி 15ஆம் தேதி பயன்பாட்டிற்கு வந்தது.
கல் வீசி தாக்குதல்
டிக்கெட் கட்டணம் சற்றே அதிகமாக இருந்தாலும் பொதுமக்கள் மத்தியிலான ஆர்வத்திற்கு பஞ்சமில்லை. அப்படி என்ன தான் இருக்கிறது. ஒருமுறையாவது பயணம் செய்துவிட வேண்டும் எனப் பலரும் திட்டமிட்டு வருகின்றனர்.
நேற்று விசாகப்பட்டினத்தில் இருந்து காலை 5.45 மணிக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படுவதாக இருந்தது. இந்த சூழலில் C-8 பெட்டியில் ஜன்னல் கண்ணாடிகளை குறிவைத்து சில மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
4 மணி நேரம் தாமதம்
இதில் கண்ணாடி நொறுங்கி போனது. இதையடுத்து சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு 4 மணி நேரம் தாமதமாக காலை 9.45 மணிக்கு ரயில் புறப்பட்டு சென்றது. இதுதொடர்பாக மண்டல ரயில்வே மேலாளர் கூறுகையில், சேதமடைந்த ஜன்னல் கண்ணாடியின் மதிப்பு சுமார் ஒரு லட்ச ரூபாய். இவை அனைத்தும் பொதுமக்களின் வரிப்பணம்.
எனவே கல் வீசி தாக்குதல் நடத்துவது போன்ற மோசமான சம்பவங்களில் ஈடுபடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. குற்றவாளிகள் சிக்கினால் கடும் தண்டனை வழங்கப்படும் எனத் தெரிவித்தார். முன்னதாக ஜனவரி மாதம் பராமரிப்பு பணிகள் நடந்து கொண்டிருந்த போது, இதே விசாகப்பட்டினத்தில் தான் கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
என்னென்ன வசதிகள்
இதையடுத்து சிசிடிவி கேமராக்கள் மூலம் குற்றவாளிகளை ரயில்வே பாதுகாப்பு படையினர் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர். வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் சிறப்புகளை பற்றி சொன்னால் சொல்லிக் கொண்டே போகலாம்.
சோதனை ஓட்டத்தின் போதே மணிக்கு 180 கிலோமீட்டர் வேகம் வரை சென்று ஆச்சரியப்படுத்தியது. தானியங்கி கதவுகள், பயோ கழிவறை, முழுவதும் ஏசி பெட்டிகள், 360 டிகிரியில் சுழலும் இருக்கைகள், டிவி, வைஃபை வசதிகள் என லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது.