குட் நியூஸ்..!! +1, +2 மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 அறிவித்த முதல்வர் ஸ்டாலின்!

ஐஐடி – பள்ளிக்கல்வித்துறை இடையே, அனைவருக்கும் ஐ.ஐ.டி.எம். திட்டத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. ஊரகப் பகுதிகளில் கல்வி பயிலும் ஒரு லட்சம் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளை மின்னணு அறிவியலுடன் இணைக்கும் முயற்சியே அனைவருக்கும் ஐஐடிஎம் திட்டம்.

சென்னை ஐஐடி வாயிலாக 250 அரசு மேல்நிலைப்‌ பள்ளிகளைச்‌ சேர்ந்த 500 அறிவியல்‌ ஆசிரியர்களுக்குப்‌ பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அவர்கள்‌ வாயிலாக 1 லட்சம்‌ மாணவர்களுக்குக் கற்பித்தல் நடத்தப்படும். இதற்குப் பயன்‌ தரும்‌ வகையில்‌ மின்னணு செய்முறைப் பெட்டகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதனை சம்பந்தப்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு முதல்வர்‌ ஸ்டாலின் வழங்கினார்.

இதன் தொடர்ச்சியாக, முதல்வரின் திறனறி தேர்வு திட்டம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டு, திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திறனறி தேர்வு திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் 1,000 மாணவர்களுக்கு, அவர்கள் 12-ம் வகுப்பை நிறைவு செய்யும் வரையிலும் மாதந்தோறும் ரூ. 1,000 வழங்கப்படும். அதே மாணவர்கள் இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கு வரும்போது ஆண்டிற்கு ரூ.12,000 வழங்கப்படும். தேர்வாகும் 1,000 மாணவர்களுக்கும் ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களுடன் தொடர்பு ஏற்படுத்தி வழிகாட்டுதல் நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.

இந்த திட்டத்தை தொடங்கி வைத்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், “இத்திட்டத்தின் நோக்கம், தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களை மேலும் ஊக்கப்படுத்துவதற்கும் அவர்கள் உயர்கல்வியைத் தொய்வின்றித் தொடர்வதற்கும் உதவி செய்வதே. இந்த திட்டத்தின் வாயிலாக 10-ம் வகுப்புப் பயிலும் (500 மாணவர், 500 மாணவியர்) 1,000 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் அனைவருக்கும் சென்னை ஐஐடி போன்ற முன்னணி கல்வி நிறுவனங்களுடன் தொடர்பினையும் வழிகாட்டுதல்களும் வழங்கப்படும். அவர்களுடைய 12-ம் வகுப்பினை நிறைவு செய்யும் வரை ஒவ்வொரு மாதமும் ரூபாய் 1,000 வழங்கப்படும். இத்திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் தங்களுடைய இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டப் படிப்பை தொடரும் போதும் ஒவ்வொரு ஆண்டும் ரூ.12,000 வீதம் உதவித்தொகையும் பெறுவார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது உரையைத் தொடங்கும் போது நான் சொன்னேன்… எதன் பொருட்டும் ஒருவரது வாய்ப்பு பறிபோகக் கூடாது என்று சொன்னேன். அரசு பள்ளியில் படிக்கும் நமக்கு தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இணையான தனிப்பயிற்சிகள் கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் எவருக்கும் இருக்கக் கூடாது. அதற்காகத் தான் இந்தத் திட்டம் ஆகும்.

சமூக அமைப்போ – பொருளாதார நிலைமையோ – அவர்களது வளர்ச்சியைத் தடுக்கக் கூடாது. பெண் என்பதற்காக பள்ளிப் படிப்போடு அவர்களது கல்வி நிலை சுருக்கப்படக் கூடாது. இத்தகைய சமூக அநீதிகளைக் களைவது தான் சமூகநீதி. இடஒதுக்கீடாக இருந்தாலும் – கல்வி உதவித் தொகைகளாக இருந்தாலும் தரப்படுவதற்கு இதுதான் காரணம். இது போன்ற சமூக நலத்திட்டங்களின் காரணமாகத் தான் சமூகமும் வளர்ந்துள்ளது. நாடும் வளர்ந்துள்ளது” எனப் பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.