புதுடெல்லி: கேரளாவின் மீடியா ஒன் செய்திச் சேனலுக்கு மத்திய அரசு விதித்த தடையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து நேற்று உத்தரவிட்டது. மேலும், தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் பொதுமக்களின் உரிமைகளுக்கு தடை போடக்கூடாது என்று மத்திய அரசை நீதிபதிகள் கடுமையாக விமர்சித்தனர்.
மீடியா ஒன் செய்திச் சேனல் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
பத்திரிகை சுதந்திரம் அவசியம்: அரசின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து மீடியா ஒன் சேனல் விமர்சித்ததை தேச விரோதம் என்று கருதிவிட முடியாது. துடிப்பான ஜனநாயகத்துக்கு பத்திரிகை சுதந்திரம் என்பது மிகவும் அவசியமான ஒன்று.
பாதுகாப்பு அனுமதி இல்லாததால் மீடியா ஒன் சேனலின் ஒளிபரப்பு உரிமத்தை புதுப்பிக்க மறுத்த தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
தேசிய பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் உரிமைகளை மறுக்க முடியாது. இந்த வழக்கில் மத்திய உள்துறை அமைச்சகம் அக்கறையற்ற வகையில் செயல்பட்டுள்ளது. எனவே, மத்திய அரசின் முடிவை ஏற்றுக்கொண்டு கேரள நீதிமன்றத்தின் வழங்கிய தீர்ப்பு நிராகரிக்கப்படுகிறது.
நியாயமான காரணம் இல்லை: மீடியா ஒன் மீதான ஒளிபரப்புத்தடை விதிக்கும் முடிவை நியாயப் படுத்துவதற்கு தேவையான எந்தவொரு உண்மையான ஆதாரங்களையும் மத்திய அரசு தாக்கல் செய்யவில்லை.
அரசு நடவடிக்கைகளை பத்திரிகைகள் ஆதரிக்க வேண்டும் என்ற ஆளும் அரசின் நிலைப்பாட்டை அனுமதிக்க முடியாது. அரசாங்கத்தை விமர்சித்தது மட்டுமே ஒரு தொலைக்காட்சி சேனலின் உரிமைத்தை ரத்து செய்வதற்கான காரணமாக இருக்க முடியாது.
வெளிப்படை தன்மை தேவை: சீலிடப்பட்ட கவரில் மத்திய அரசு தாக்கல் செய்யும் அறிக்கைஇயற்கை நீதி மற்றும் வெளிப்படையான நீதியின் கொள்கைகளை மீறும் வகையில் அமைந்துள்ளது.
நீதிமன்ற விசாரணையில் எதிர் தரப்பினருக்கு தகவல்களை வெளியிடுவதில் அரசு மூடிமறைத்து செயல்பட இதனை கருவியாக பயன்படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அனைத்து விசாரணை அறிக்கைகளையும் ரகசியம் என்று கூறி புறந்தள்ளமுடியாது. ஏனெனில், அவை குடிமக்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை பாதிக்கின்றன. இவ்வாறு நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்தனர்.
தேச பாதுகாப்பை காரணம் காட்டி மீடியா ஒன் சேனலின் ஒளிபரப்பு உரிமத்தை புதுப்பிக்க மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் மறுத்துவிட்டது. அனுமதி பட்டியலிலிருந்து அந்த சேனல் நீக்கப்பட்டதையடுத்து கடந்த ஆண்டு ஜனவரி 31-ம் தேதியுடன் மீடியா ஒன் ஒளிபரப்பு நிறுத்தம் செய்யப்பட்டது. மத்திய அரசின் இந்த முடிவை ஆதரித்து கேரள உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு மார்ச் 15-ம் தேதி நிறுத்தி வைத்தது. இந்த சூழ்நிலையில், தற்போது மீடியா ஒன் வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.