சென்னை விமான நிலையத்தில் ரூ.95.15 லட்சம் மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் வாலிபர் ஒருவரை கைது செய்தனர்.
வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் மூலம் தங்கம் கடத்தி வரப்படுவதை தடுப்பதற்காக சுங்க இலாகா அதிகாரிகள் விமான பயணிகளிடம் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து அபுதாபியில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளிடம் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பொழுது சென்னையை சேர்ந்த வாலிபர் ஒருவரிடம் விசாரித்ததில், அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் அவரது உடமைகளை சோதனை செய்ததில், சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் மின்சார மோட்டார் ஒன்று இருந்துள்ளது. இதையடுத்து அதிகாரிகள் மின்மோட்டாரை உடைத்துப் பார்த்ததில், தங்கத்தை உருளை போல் மாற்றி கடத்தி வந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, ரூபாய் 95.15 லட்சம் மதிப்பிலான 1 கிலோ 796 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், வாலிபரை கைது செய்தனர். மேலும் இந்த தங்கம் கடத்தல் தொடர்பாக அதிகாரிகள் வாலிபரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.