ஈரோடு மாவட்டம், சித்தோட்டில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மே 5-ஆம் தேதி வணிகர் உரிமை முழக்க மாநாடு நடைபெற உள்ளது. இதுதொடர்பாக ஈரோட்டில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா கூறுகையில், “வணிகர்களுக்கு 3 ஆண்டுகால உரிமம் வழங்கும் முறையை தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.
வணிக நல வாரிய உறுப்பினரை உடனடியாக நியமிக்க வேண்டும். ஈரோட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நேதாஜி ஜவுளி மார்கெட்டில் முன்பிருந்த வணிகர்களுக்கே கடைகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்து சித்தோட்டில் மே 5-ஆம் தேதி வணிகர் உரிமை முழக்க மாநாடு நடைபெற உள்ளது.
அந்நிய நாட்டு பெரு நிறுவனங்கள் ஆன்லைன் வணிகத்தின் மூலம் எங்களின் வணிகத்தை சுரண்டிக் கொண்டிருக்கிறது. சிறு வியாபாரிகளின் வணிகத்தைக் காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் சிறப்பு சட்டம் நிறைவேற்ற வேண்டும். சிறு வணிகர்களை காப்பாற்றவில்லை என்றால் நாட்டின் பொருளாதாரம் பின்னடைவைச் சந்திக்கும். ஆன்லைன் வர்த்தகத்தை முறைப்படுத்துவதுடன், உள்நாட்டு வணிகத்தை சீர்படுத்த மத்திய அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும். தரமில்லாத காலாவதியான பொருள்கள் குறித்து ஆதாரத்துடன் வெளியிட உள்ளோம். மருந்துப் பொருள்களை ஆன்லைனில் விற்பனை செய்யக் கூடாது.
தமிழ்நாடு முழுவதும் தமிழில் தான் பெயர் பலகை இருக்க வேண்டும் என்பதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புக்கு மாற்றுக் கருத்து இல்லை. வணிக நிறுவனங்களின் அனைத்து பெயர்ப் பலகையும் 6 மாதத்துக்குள் தமிழில் மாற்றம் செய்யப்படும்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், வேறு மொழியில் உள்ள பெயர்ப் பலகையை உடனடியாக அழிக்கப்படவேண்டும் இல்லையெனில் கறுப்பு மையை பூசவோம் என தெரிவித்துள்ளார். இந்த நிலைப்பாட்டை அவர் திரும்ப பெற வேண்டும். இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல், தமிழக அமைச்சர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம்” என்றார்.