ஹைதராபாத், தெலுங்கானா பா.ஜ., தலைவரும், லோக்சபா எம்.பி.,யு மான பண்டி சஞ்சய் குமார் வீட்டுக்குள் நேற்று முன்தினம் இரவு நுழைந்த போலீசார் அவரை பலவந்தமாக கைது செய்தனர். இது தெலுங்கானா அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.
தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் பாரத் ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது.
இவரது ஆட்சியில் ஊழல் தலைவிரித்தாடுவதாகவும், குடும்ப அரசியல் கொடிகட்டி பறப்பதாகவும் பா.ஜ., தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டு நடக்க வுள்ள சட்டசபை தேர்தலில், ஆளும் பாரத் ராஷ்ட்ரீய சமிதிக்கு மிகப் பெரிய சவாலாக பா.ஜ., உள்ளது.
அச்சுறுத்தல்
மாநில பா.ஜ., தலைவரும், கரீம்நகர் மாவட்ட லோக்சபா எம்.பி.,யுமான பண்டி சஞ்சய் குமார், முதல்வர் சந்திரசேகர ராவுக்கு எதிராக வலுவான அரசியல் செய்து வருகிறார். இது, ஆளுங்கட்சிக்கு தலைவலியாக உள்ளது.
இந்நிலையில், பண்டி சஞ்சய் குமாரின் இல்லத்துக்கு, போலீசார் நேற்று முன்தினம் இரவு வந்தனர்.
அவரிடம் எவ்வித விளக்கமும் அளிக்காமல் அவரை கைது செய்தனர்.
இதற்கு சஞ்சய் குமார் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அவரை பலவந்தமாக துாக்கி, போலீஸ் வாகனத்தில் ஏற்றி அழைத்து சென்றனர்.
அவர் பல்வேறு மாவட்டங்களில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களுக்கு அழைத்து செல்லப்பட்டு அலைக்கழிக்கப்படுவதாகவும், அவர் எங்கு வைக்கப்பட்டு உள்ளார் என்ற விபரம் தெரியாததால் அவரது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளதாகவும் பா.ஜ., தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரம் மாநிலம் முழுதும் பரபரப்பு ஏற்படுத்தி வருவதை தொடர்ந்து, ௧௦ம் வகுப்பு பொதுத் தேர்வு வினாத் தாள் வெளியான விவகாரத்தில் பண்டி சஞ்சய் குமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் நேற்று விளக்கம் அளிக்கப்பட்டது.
கொந்தளிப்பு
தெலுங்கானாவில் வரும், 8ம் தேதி பல்வேறு வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைத்து, பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.
அவரது வருகைக்கு முன்னதாக மாநில பா.ஜ., தலைவர் கைது செய்யப்பட்டுள்ளது, தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இவரது கைதுக்கு, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.