சென்னை: பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடி வரும் 8-ம் தேதி சென்னை வரும் நிலையில், சென்னை முழுவதும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் 15 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, இரண்டு நாள் பயணமாக தமிழகத்துக்கு ஏப்.8, 9 ஆகிய தேதிகளில் வர உள்ளார். ஹைதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு ஏப்.8-ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு வந்தடைகிறார்.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ரூ.1,260 கோடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடத்தை (முதல்பகுதி) பிரதமர் தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு மாலை 4மணி வருகிறார். அங்கு, சென்னை-கோயம்புத்தூர் வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சேவையை தொடங்கி வைக்கவுள்ளார். மேலும், இதர ரயில்வே திட்டங்களையும் அவர் தொடங்கிவைக்கிறார். இதையடுத்து, மாலை 4.45 மணிக்கு சென்னையில் உள்ள ராமகிருஷ்ணா மடத்தின் 125-வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
மாலை 6.30 மணியளவில் சென்னை அல்ஸ்தான் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் பொது நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
ஏப்.9-ம் தேதி அன்று முதுமலை புலிகள் சரணாலயத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமுக்கும் பிரதமர் செல்ல உள்ளார். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு, சென்னையில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை முழுவதும் 15 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். சென்னை விமானநிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 8-ம் தேதி சென்னை முழுவதும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்க பிரதமர் மோடி சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வர உள்ள நிலையில், இந்த நிலையத்தில் 1,500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
இது குறித்து தமிழக ரயில்வே காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடங்கியுள்ளது. சென்ட்ரல் ரயில் நிலையம் முழுவதும் ஏப்.6-ம் தேதி முதல் காவல்துறையின் கட்டுப்பாட்டில் வரும்.ரயில்நிலையத்தின் அனைத்து நுழைவாயிலில் பரிசோதனை மேற்கொள்ளப்படும். பாதுகாப்பு முன்னெச்சரிக்கை யாக, ரயில் நிலையத்தின் 10,11-வது நடை மேடைகளில்இருந்து விரைவு ரயில்கள் 7-ம்தேதி இரவு முதல் வந்து, செல்வதுநிறுத்தப்படும். ஆர்.பி.எஃப் காவலர்கள், தமிழக ரயில்வே காவலர்கள், சென்னை நகர காவலர்கள் என மொத்தம் 1,500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றார்.