சென்னை: பிரபல பாலிவுட் வில்லன் நடிகர் ராகுல் தேவ் சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது மூளையை கழட்டி வீட்டில் வைத்து விட்டு வந்து தான் தென்னிந்திய படங்களில் நடிப்பேன் என பரபரப்பாக பேசி உள்ளார்.
கடந்த 2000ம் ஆண்டு சன்னி தியோல் நடிப்பில் வெளியான சாம்பியன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ராகுல் தேவ். தமிழில் விஜயகாந்தின் நரசிம்மா படம் மூலம் வில்லனாக அறிமுகமான ராகுல் தேவ் கடந்த ஆண்டு வெளியான தி லெஜண்ட் படம் வரை தமிழில் பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடா, ஒடியா, மலையாளம், பஞ்சாபி, பெங்காலி, போஜ்புரி, மராத்தி, குஜராத்தி என உண்மையான பான் இந்தியா நடிகராக ஏகப்பட்ட மொழிகளில் நடித்து அசத்திக் கொண்டிருக்கிறார்.
சாரா அலி கான் நடிப்பில் சமீபத்தில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் நேரடியாக வெளியான கேஸ் லைட் படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில், அந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக பேட்டி கொடுத்த நடிகர் ராகுல் தேவ், தென்னிந்திய படங்களில் தான் நடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளது சில சர்ச்சைகளை எழுப்பி உள்ளது.
மூளையை கழட்டி வைத்து விட்டு
பாலிவுட் படங்களை பற்றி பெரிதாக பேசாமல் தென்னிந்திய படங்களில் தான் நடிக்கும் போது மூளையை வீட்டிலேயே கழட்டி வைத்து விட்டு வந்து தான் நடிப்பேன் எனக் கூறியுள்ளார். தென்னிந்திய படங்களில் ஒருத்தர் 100 பேரை அடிப்பது, பாடி பில்டரான என்னை வலுவில்லாத ஹீரோ புரட்டிப் புரட்டி எடுப்பது போன்ற காட்சிகளை கமர்ஷியல் என்கிற பெயரில் வைத்து வருகின்றனர் என பேசியுள்ளார்.
லெஜண்ட் வில்லன்
சூர்யாவின் ஆதவன், அஜித்தின் வேதாளம் மற்றும் லெஜண்ட் சரவணனின் தி லெஜண்ட் உள்ளிட்ட தமிழ் படங்களில் சமீபத்தில் இவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ள ராகுல் தேவ் பொதுப்படையாக சினிமா என விமர்சிக்காமல் தென்னிந்திய படங்களில் இப்படி எடுக்கின்றனர் என பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
ஆனால், தனது பேட்டியில் அப்படி எடுப்பது ஒன்றும் தவறு இல்லை என்றும் கமர்ஷியல் படங்கள் என்றால் எப்படி வேண்டுமானால் காட்டலாம். நிஜத்தில் இருவருக்கு இடையே சண்டை நடக்கும் போது யாரும் சட்டையை கழட்டிக் கொண்டு தங்கள் உடம்பை காட்ட மாட்டார்கள். கோபம் வந்தால் கட்டிப் புரண்டு சண்டை போடுவார்கள் அவ்வளவு தான். ஆனால், இங்கே நடிகர்களின் உடம்பை காட்ட வேண்டும், வில்லனின் பாடியை காட்ட வேண்டும் என ஏகப்பட்ட விஷயங்களை காட்சிப்படுத்தி வருகின்றனர் எனப் பேசி உள்ளார்.