புதுடில்லி, ”நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால், வழக்கறிஞர்கள் ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக ஆஜராகி வாதாடுவதை விரும்புகிறோம்,” என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்து உள்ளார்.
நம் நாட்டில், கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ௧௬௩ நாட்களுக்கு பின் முதல்முறையாக கொரோனா பாதிப்பு நேற்று ஒரே நாளில் ௪,௪௩௫ ஆக பதிவானது.
இதையடுத்து, கொரோனா பரிசோதனையை அதிகரிக்கும்படியும், தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்தும்படியும், அனைத்து மாநில அரசுகளுக்கு, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சமீபத்தில் உத்தரவிட்டது. இந்நிலையில் நேற்று, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி ஜே.பி.பர்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு, வழக்கு ஒன்றின் விசாரணையின் போது கூறியதாவது:
நாட்டில், கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால், வழக்கறிஞர்கள் தேவைப்பட்டால், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆஜராகியும் வாதாடலாம். இது குறித்து தெரிவித்தால், அதற்கான வசதிகள் செய்து தரப்படும்.
இவ்வாறு அமர்வு கூறியது.
Advertisement