முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு முகசீரமைப்பு சிகிச்சை மேற்கொண்டு குணமடைந்த சிறுமி டானியா பள்ளி செல்லத் தொடங்கியதையொட்டி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் மோரை கிராமத்தை சேர்ந்த ஸ்டீபன்ராஜ் – சௌபாக்யா தம்பதியின் 9 வயது மகளான டானியாவுக்கு மூன்றரை வயதில் முகத்தில் கரும்புள்ளி தோன்றியது. நாளடைவில் முகம் மாறுபட்டு பாதிப்பு அதிகமானது. 6 ஆண்டுகளாக பல மருத்துவமனைகள் ஏறி இறங்கி சிகிச்சை பெற்றும் சிறுமியின் ஒருபக்க முகம் சிதையத் தொடங்கியது. இதைத்தொடர்ந்து சிறுமி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமுக வலைதளம் வாயிலாக உதவி கேட்டிருந்தார்.
இதைத்தொடர்ந்து முதல்வர் உத்தரவின் பேரில் சிறுமி டான்யாவுக்கு தண்டலத்தில் உள்ள சவிதா மருத்துவமனையில் கடந்த ஆண்டு அகஸ்ட் மாதம் 23ம் தேதி இலவசமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவுற்றதை தொடர்ந்து முதல்வர் நேரில் வந்து சந்தித்து டானியாவிற்கு ஆறுதல் கூறி இருந்தார்.
இதனை அடுத்து கடந்த டிசம்பரில் அறுவைச் சிகிச்சையின் போது வாய் பகுதியில் பொருத்தப்பட்ட சிரிய கிளிப்பை எடுக்க மீண்டும் தண்டலத்தில் உள்ள சவிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அமைச்சர் நாசர் சிறுமியை நேரில் சந்தித்து நலம் விசாரித்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சரின் செல்போன் வாயிலாக சிறுமியிடம் நலம் விசாரித்தார். நல்லப்படியாக சிகிச்சை முடியும் என்றும் படிக்கிறாயா என்றும் கேட்டார். பின்னர் கிறிஸ்துமஸ் வாழ்த்தும் கூறினார்.
இந்த நிலையில் முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு முகசீரமைப்பு சிகிச்சையால் குணமடைந்த சிறுமி டானியா மீண்டும் பள்ளிக்கு செல்லவுள்ளார். இதனை அறிந்த முதல்வர் ஸ்டாலின் சிறுமியை வாழ்த்தி கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில்,
அன்புள்ள டானியாவுக்கு,
பள்ளிக்குச் செல்லத் தொடங்கிவிட்டாய் என்றறிந்தேன். மகிழ்ச்சி!
ஆசிரியர்களோடு அன்பான நண்பர்களும் உனது உயர்வுக்கு உறுதுணையாக அமைய வாழ்த்துகிறேன்!
என இவ்வாறு கூறியுள்ளார்.