சமீபகாலமாக அரசியல் பேசும் திரைப்படங்கள் வெளிவருவது அதிகரித்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில் அதன் வளர்ச்சியைக் கண்கூடாகக் காணமுடிகிறது. அதற்கு இப்போது இருக்கும் மார்க்கெட்தான் (சந்தை மதிப்பு) காரணம்.
ரஜினிகாந்த் இப்போது ‘ஜெய் பீம்’ இயக்குநர் ஞானவேலின் படத்தில் நடிக்க இருப்பது, கமல், இயக்குநர் பா.இரஞ்சித்தோடு கூட்டணி அமைப்பது, சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்கள் சமூக அரசியல் சார்ந்த படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுவது, ‘ஜெய் பீம்’, ‘லால் சலாம்’ என புரட்சிகர வார்த்தைகளைத் தலைப்பாக வைப்பது எனப் புதிதாக உருவாகியிருக்கும் இந்த மார்க்கெட், பழங்குடி மக்களுக்கு ஆதரவாகச் சட்டத்தை மாற்றும் அளவுக்கு பல நன்மைகளை உண்டாக்கியிருக்கிறது.
கலை சினிமாக்களில் மட்டும் முன்னர் காணப்படும் இந்த அரசியல், இன்று வெகுஜன திரைப்படங்களிலும் இடம்பெற்றுப் பேசுபொருளாக மாறி வருகிறது. அவ்வாறு கடந்த வாரம் வெளியாகியிருக்கும் ‘விடுதலை’ ஆயுதம் ஏந்திப் போராடிய “நக்சல்”களின் அரசியலைப் பேசியிருக்கிறது. நக்சல் அரசியல் பேசும் படங்கள் இன்று நேற்று வந்தது கிடையாது. ‘குருதிப்புனல்’, ‘ராணுவ வீரன்’ என 80, 90 காலகட்டங்களிலேயே வெளிவந்துள்ளன. ஆனால் அவை எவ்வாறு அரசியல் பேசின, ‘விடுதலை’ அவற்றிலிருந்து எங்கு மாறுபடுகிறது என்பதைப் பார்க்கும் தொகுப்பே இது…
தொலைவில் பசுமையாகக் காட்சியளிக்கும் வனம். அதன் அருகே நெருங்க நெருங்க தன்னகத்தை வைத்துள்ள பெரும் மர்மங்களைப் போட்டுடைக்கும். அப்படி வனத்தில் சத்தமின்றி மறைக்கப்பட்ட சமூகத்தின் முகத்தினை ‘விடுதலை’ வெளிச்சம்போட்டுக் காட்டியிருக்கிறது. மக்கள் படை, வாத்தியார், காவல்துறை என நகரும் கதைக்களம் தமிழக நக்சல்பாரிகளின் வாழ்க்கையை மீள் பார்வை செய்ததோடு, இதுநாள் வரை தமிழ் சினிமா சித்திரித்த நக்சல் கதாபாத்திரங்களின் மேல் அடுக்கடுக்கான கேள்விகளையும் வைத்துள்ளது.
நாசர்: “உங்க பேச்சுவார்த்தைல எனக்கு நம்பிக்கை இல்ல. நான் போராளி!“
கமல்: “அப்ப இங்கேயே சாக வேண்டியதான்!“
நாசர்: “நான் செத்தா விழுகிற விதைல ஆயிரம் பேர் என்னை மாதிரி முளைப்பாங்க!”
கமல்: “அதெல்லாம் முளைக்க மாட்டாங்க. நீ செத்தா பயம்தான் முளைக்கும். உனக்கு அப்புறம் இருக்கும் தலைமுறைய நினைச்சுப் பார். சினிமா பார்த்து வளர்ந்த பலவீனமான கூட்டம்தான் மிஞ்சும். ஒண்ணு அவங்கள அரசாங்கம் விலைக்கு வாங்கிரும், இல்ல மிதிச்சு நசுக்கிரும்.”
இவை யாவும் குருதிப்புனல் படத்தில் போலீஸ் அதிகாரியாக வரும் கமலுக்கும், பயங்கரவாதியாகக் காட்டப்படும் நாசருக்கும் இடையே நடக்கும் விசாரணைக் காட்சியின் வசனங்கள். “சினிமா பார்த்து வளர்ந்த பலவீனமான கூட்டம்தான் மிஞ்சும்”, இந்த வசனத்தைப் போல “மாவோயிஸ்ட், நக்சல்” என்ற வார்த்தையைக் கேட்டவுடன் வெடிகுண்டு வைப்பவர்கள், கொள்ளையடிப்பவர்கள், காமுகர்கள் என்ற பிம்பங்களையே வெள்ளித்திரை உருவாகியுள்ளது. உண்மையான வரலாற்றைப் பாதி திரித்தும் பாதி மறைத்தும் மேலோட்டமான புரிதலில் ரசிகர்களிடம் வேறொரு பிம்பத்தைக் கட்டமைத்துள்ளது. உண்மையில் யார் இந்த நக்சல்பாரிகள்?
இந்தப் பழங்குடிகளின் கவிதைகளைப் போலக் காடுகளை இன்றும் அழியாமல் காப்பதில் பழங்குடிகளின் பங்கு அளப்பரியது. நாடு விடுதலை அடைவதற்கு முன்பே பிரித்தானியக் காலனிய ஆட்சியில் வளர்ச்சி என்னும் பெயரில் நம்பிக்கை தந்து பழங்குடிகளைக் காட்டை விட்டு விரட்டும் செயலைச் செய்தார்கள். கிளர்ந்தெழுந்த பழங்குடி கூட்டம் அவர்களை எதிர்த்துப் போரிட்டது. இதனை ‘சாந்தல் எழுச்சி’ என்று கூறுகிறார்கள். பிர்சா முண்டா எனும் பழங்குடி தலைவர், வில் அம்பை வைத்து அதிகாரத்தைப் புறமுதுகிட்டு ஓட வைத்தார். அந்த வீரத்தின் அடையாளமாக ஜார்கண்ட் மாநிலத்தில் சிலை வைக்கப்பட்டுள்ளது.
ஜார்கண்ட் சிலைகளைப் போல மேற்கு வங்கத்தில் இமயமலை அடிவாரத்தில் மெச்சி நதியோரத்திலுள்ள ‘நக்சல்பாரி’ எனும் கிராமத்தில் வேறு சில சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. சிலையில் இருக்கும் நபர்களும் காலகட்டமும் வேறு என்றாலும் மேலே சொன்ன காரணம் ஒன்றுதான். சமவெளிப் பகுதியிலிருந்து மலைப்பகுதியில் ஊடுருவியவர்கள், அரசின் உதவியோடு பழங்குடிகளின் நிலத்தை அபகரித்தனர். அதை எதிர்த்து மக்கள் கொதித்தெழுந்து போராடினர். போராட்டத்தின் முடிவில் அரச பயங்கரத்தால் 8 பெண்கள், 2 குழந்தைகள் உட்பட 12 உயிர்கள் பறிபோயின.
இதை எதிர்த்து ஒரு கம்யூனிச சிந்தனையுள்ள இயக்கம் போராடியது. அதனைச் சாரு மஜூம்தார் தலைமை ஏற்று வழிநடத்தினார். “உழுபவனுக்கே நிலம் சொந்தம்” என்ற கொள்கையைத் தீவிரமாக விளிம்புநிலை மக்களிடம் கொண்டு சேர்த்தது. கம்யூனிசப் போராளிகள் அக்காலகட்டத்தைக் கூறும் போது “அது எங்கள் வசந்தத்தின் இடி முழக்கம்” என்பார்கள். அப்படி இடி முழக்கமென மேற்கு வங்கத்தில் தொடங்கிய அந்த ஆயுதப் போராட்டக் குரல் கேரளம், ஆந்திரா, தமிழ்நாடு என்று நாடெங்கும் பரவியது. ‘விடுதலை’ திரைப்படத்திலும் சாலை அமைத்துத் தருகிறோம், மின்சார வசதி செய்து தருகிறோம் என்று அவர்களின் கனிம வளங்களைச் சுரண்டுவதாகக் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும்.
போஸ் வெங்கட்: “எங்க கொள்கைய புரிஞ்சுக்க நீ ஒடுக்கப்பட்டவனா இருந்திருக்கணும்”
ஜீவா: “ஊழலு, உண்ணாவிரதம், அறிக்கைன்னு அரசியல்வாதிங்க ஒரு டைலாக் வச்சிருக்காங்கன்னா… ஒடுக்கப்பட்டவன், சுரண்டல், சமூக அநீதின்னு நீங்க ஒரு டைலாக் வச்சிருக்கீங்க.”
நாடே கொண்டாடித் தீர்த்த ‘கோ’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியின் வசனங்கள் இவை. நக்சல் குறித்த மேம்போக்கான பார்வையைக் கையாண்ட படங்களில் முதன்மையாக இதனைச் சொல்லாம். நக்சல்கள் ஆயுதப் புரட்சி மூலம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதை லட்சியமாகக் கொண்டவர்கள். “தேர்தல் பாதை, திருடர் பார்வை” என்ற நம்பிக்கை உடையவர்கள். ஆனால் ‘கோ’ அதற்கு நேர்மாறாக அரசியலை அவர்கள் கையில் எடுத்தாகச் சித்திரித்திருக்கும். நக்சல்கள் ஆயுதம் தாங்கி நகரங்களில் நேரடியாக மக்களை அழிக்கக்கூடிய செயல்களைச் செய்திருப்பதாகச் சான்றுகளில்லை. ஆனால் அப்படத்தில் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டு, சாமானிய மக்களைக் கொல்வது போலக் காட்டப்பட்டிருக்கும். பொது மக்கள் கூடும் தேர்தல் கூட்டத்தில் குண்டு வைத்து மக்களைக் கொன்றதாகவும் காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.
காவிரியிலிருந்து தண்ணீர் கொண்டு வர வேண்டும் என்பதற்காகத் தடுப்பணையை உடைக்கும் செலவிற்காக வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட ‘தமிழர் விடுதலைப் படை’யைச் சேர்ந்த பொன்பரப்பி தமிழரசன். மக்கள் மத்தியில் பிடிபட்டபோது, அவர் கையிலிருந்த துப்பாக்கியைப் பயன்படுத்தாமல் அந்த மக்களிடம் அடிவாங்கி இறந்துபோனார். ஆனால் ‘கோ’ திரைப்படத்தில் நக்சல் கும்பல் சகட்டு மேனிக்கு மக்களைச் சுட்டுத் தள்ளுவார்கள் என்று காட்சியமைக்கப்பட்டிருக்கும்.
‘விடுதலை’ படத்தின் ஆரம்பக் காட்சியில் ரயில் பாலத்தின் நடுவே குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டதாகக் காட்சி இருக்கும். இது 1987-ம் ஆண்டு மார்ச் 15ஆம் தேதி அரியலூருக்கு அருகில் உள்ள மருதையாற்றுப் பாலம் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்ட நிகழ்வை நினைவுகூர்வதாக இருக்கிறது. இதை நிகழ்த்தியது தமிழரசனின் ‘தமிழர் விடுதலைப் படை’ என்றும், அதுவே படத்தில் ‘மக்கள் படை’ என்று காட்சிப்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.
பாலத்தைத் தகர்த்து கவனத்தை ஈர்ப்பதுதான் விடுதலைப் படையின் நோக்கம் என்றும், ரயிலைக் கவிழ்ப்பது அவர்கள் நோக்கமல்ல என்றும் சொல்லப்பட்டது. ஆனால் இந்தச் சம்பவத்தில் 36 நபர்கள் இறந்தனர். இதன் மூலம் தமிழர் விடுதலைப் படை தடை செய்யப்பட்ட இயக்கமானது. தமிழரசன் அந்த ஆண்டே மேல் சொன்ன வங்கிக்கொள்ளையில் பொது மக்களின் நடுவே ஊடுருவிய காவலர்களால் அடித்துக் கொல்லப்பட்டார்.
தமிழரசன், புலவர் கலியபெருமாள் ஆகியோர் தமிழக நக்சல்பாரி இயக்கத்தின் முன்னோடிகள். சாரு மஜூம்தார் கொள்கையில் ஈர்க்கப்பட்டு பெரும் முதலாளிகள், கந்துவட்டிக்காரர்கள், பண்ணையார்கள் ஆகியோர்களை அழித்தொழிப்பு செய்தவர்கள். பின்னர் தனித்தமிழ்நாடு வேண்டும் என்று கோரிக்கை வைத்து அதே ஆயுதப் போராட்டத்தைத் தொடர்ந்தவர்கள்.
‘விடுதலை’ திரைப்படத்தில் வரும் வாத்தியார் கதாபாத்திரம், புலவர் கலியபெருமாளின் கதாபாத்திரத்தைத் தழுவி எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. புலவர் கலியபெருமாள் ஆசிரியராக இருந்து மக்களுக்கான போராட்டங்களைச் செய்தவர். சாரு மஜூம்தாரைச் சந்தித்த பின்னர் தமிழக நக்கசால்பாரி தலைவரான அப்புவோடு இணைந்து நக்சல்பாரி இயக்கத்தில் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்ற கலியபெருமாள், பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.
காவல் துறை, ராணுவம் என்றாலே எதிரிகளை நசுக்கி மக்களைக் காப்பாற்றும் சாகசக்காரர்கள் என்ற கதைக்களம் தமிழ்த் திரைத்துறைக்குப் பெரிதும் பழக்கப்பட்டது. அப்படி 1981-ம் ஆண்டு வெளியான திரைப்படம்தான் ‘ராணுவ வீரன்’. முதலில் எம்.ஜி.ஆர் இப்படத்தில் நடிப்பதாக இருந்து பின்னர் ரஜினி, சிரஞ்சீவி என இரு மாநில நட்சத்திரங்கள் இதில் நடித்தார்கள். இதில் வில்லனாகச் சித்திரிக்கப்பட்டிருக்கும் சிரஞ்சீவி தலைமறைவு வாழ்க்கை வாழ்பவராக இருப்பார். அழித்தொழிப்பு என்பதாகப் பண்ணைக்காரர்கள், பெருமுதலாளிகளைக் கொள்ளை அடிப்பதாகக் காட்டப்பட்டிருந்தாலும், மக்களைத் துன்புறுத்தும் கொடுங்கோலனாகவும், மாறுவேடத்தில் மக்களின் பணத்தைக் கொள்ளை அடிப்பவராகவும் படுமோசமான சித்திரிப்பு இந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கும்.
இந்திய இறையாண்மை மீது நம்பிக்கை கொண்ட எவரும் ஆயுதப் போராட்டத்தை எதிர்த்துப் பேசலாம். அதனைக் கடுமையாக விமர்சனம் செய்து படம் எடுக்கலாம். ஆனால் உள்ளதை உள்ளபடி எடுப்பதே அறம். இதை 1995-ல் வெளிவந்த `குருதிப்புனல்’ செய்யத் தவறியது. புரட்சிகர அமைப்பைப் பற்றிப் பேசுகிறேன் என்ற பெயரில் நக்சல்கள், நேர்மையான காவலரின் குழந்தையை வன்புணர்வு செய்ய முயற்சி செய்கிறார்கள், தடுக்க வந்த தாயாரின் மேலும் வன்புணர்வு நிகழ்த்துகிறார்கள் என்பது போன்ற வக்கிரமான காட்சியமைப்புகள் இடம்பெற்றிருக்கும்.
அரை நூற்றாண்டைக் கடந்த நக்சல் வரலாற்றில் வன்புணர்வு போன்ற கொடிய குற்றச்சாட்டுகள் அந்த அமைப்பின் மேல் இல்லை என்பதே உண்மை. புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளரான அருந்ததி ராய், ‘தோழர்களுடன் ஒரு பயணம்’ என்னும் நூலில் காட்டிற்குச் சென்று நக்கல்களைச் சந்தித்த அனுபவங்களை எழுதியிருப்பார். அதில் “பெண் தோழர்களோடு ஆண் தோழர்கள் கண்ணியமாக நடந்துகொண்டனர்” என்று எழுதியிருப்பார். இது குருதிப்புனலில் காவலராகப் பேசும் கமலின் “நேர்மைக்காகவே வாழ்கிறேன்” என்ற வசனத்தைக் கேள்விக்குள்ளாக்குகிறது.
நேர்மையின் சிகரம் எனக் காட்டப்படும் இதே காவலர்கள் வாச்சாத்தி தொடங்கி வீரப்பன் தேடுதல் வேட்டை என்ற பெயரில் பெண்களிடம் செய்த அட்டூழியங்கள் ஏராளம். ‘விடுதலை’ திரைப்படத்தின் சில காட்சிகள் 1992-ம் ஆண்டு நடைபெற்ற வாச்சாத்தி சம்பவத்தை நினைவுபடுத்துவதாக இருக்கிறது. மேலும், கதைக் களத்தில் குறிப்பிட்ட அருமபுரி என்னும் ஊரின் பெயர், தருமபுரி என்பதும், வட ஆற்காடு வயல்வெளியில் ‘அப்பு, பாலன்’ தலைமையில் நடந்த நக்சல் பாரிகளின் போராட்டங்கள் போன்றவற்றையும் படம் நினைவுகூர்கிறது.
“நான் வெடிபொருள்களை வழங்கவில்லை
அதற்கான ஆலோசனையும் வழங்கவில்லை
நீங்கள்தான் எறும்புப் புற்றின் மீது இரும்புக் குதிகால்களால் மிதித்தீர்கள்
மிதிக்கப்பட்ட நிலத்திலிருந்து பழிவாங்கும் கருத்துக்கள் முளைத்தன
நீங்கள்தான் உங்கள் லத்திகளால் தேனீக் கூட்டைத் தாக்கினீர்கள்
சிதறிய தேனீக்களின் ஒலி அச்சத்தில் சிவந்து நடுங்கிய உங்கள் முகத்தின் முன் வெடித்தன
மக்கள் இதயத்தில் வெற்றிப் பேரிகை கொட்டியபோது
அதை ஒரு தனி மனிதனின் குரலாக தவறாக நினைத்து உங்கள் துப்பாக்கிகளுக்குப் பயிற்சி கொடுத்தீர்கள்.
புரட்சி எல்லாத் தொடுவானத்திலிருந்தும் எதிரொலித்தது.”
– கவிஞர் வரவரராவ்
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கவிஞரும் எழுத்தாளருமான வரவர ராவ், தன்மீது போடப்பட்ட பொய் வழக்கை எதிர்த்து எழுதிய கவிதை இது. 81 வயதான இவர் நக்சல் இயக்கத்தைத் தீவிரமாக ஆதரித்தவர். நக்சல் இயக்கம் இவரைப் போல தன்னகத்தே பல மெத்தப் படித்த படிப்பாளிகளையும், வழக்கறிஞர்களையும், கவிஞர்களையும் கொண்டுள்ளது.
2003-ம் ஆண்டு வெளிவந்த ஷங்கரின் ‘பாய்ஸ்’ திரைப்படம், மாவோயிஸ்ட்டுகள் மாணவர்களின் வாழ்வைச் சீரழிக்கிறார்கள். சித்தாந்த அறிவற்றவர்கள், படிப்பறிவற்றவர்கள் என்று ‘ஐயப்ப சாமி’ பாடல் எழுதுபவர்களிடம் உதவி கேட்பதாகச் சித்திரித்திருப்பார். உண்மையில் கோவன் உட்படப் பல கவிஞர்கள் அவர்கள் எழுதிய பாடலுக்காகத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டதே வரலாறு.
சமீபத்தில் வெளியான திரைப்படமான ‘ரத்தசாட்சி’, நக்சல்பாரி அப்புவின் வாழ்வைப் பிரதிபலிப்பதாகக் கூறப்பட்டது. அழித்தொழிப்பு, பண்ணையார் எதிர்ப்பு என்று ஒருபுறம் சரியாகக் காட்டப்பட்டிருந்தாலும், அப்பு கடைசியில் போலீசில் சரணடைந்ததாக உண்மைக்குப் புறம்பான தகவலையே காட்டியிருப்பார்கள். உண்மையில் காவலர் தேடுதல் வேட்டையில் அப்பு தலைமறைவானதாகவும் பிறகு என்ன ஆனது எனத் தெரியவில்லை என்பதே காவல்துறைத் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் பொதுவுடைமை இயக்க அமைப்பினர் அவர் என்கவுன்டர் செய்யப்பட்டதாக உறுதிசெய்து, தருமபுரி நாயக்கன்கொட்டாய் பகுதியில் உள்ள அப்பு, பாலன் சிலைகளுக்கு மாலை அணிவித்து கொடியேற்றி, நினைவேந்தலைக் கடைப்பிடிக்கிறார்கள்.
மேலும் அறுவடையில் கிடைத்த லாபத்தைப் பகிர்ந்து அளிக்க வேண்டும் என்பதே போராட்டத்திற்கான காரணம். ஆனால் போராட்டக் குழுவினர் வயல்வெளியை எரித்ததாக ‘ரத்தசாட்சி’யில் காட்டப்பட்டிருக்கும். யானையை வளர்க்கும் நக்சலைட்டின் மாஸ் என்ட்ரி, போராளிக் குழு பழிக்குப் பழியாகக் கொலை செய்கிறார்கள் என்பதாக எல்லாம் மேலோட்டமாகப் பேசி, அரசியல் படமாகவும் அல்லாமல் சாகசப் படமாகவும் இல்லாமல் அது இருந்தது.
வெற்றிமாறன் இப்போது கையில் எடுத்துள்ள “நக்சல் சினிமா”, அதே ஆயுத போராட்டத்தை சித்திரித்திருந்தாலும், அதற்குப் பின்னாலிருக்கும் காரண காரியங்களையும், அரச பயங்கரவாதத்தையும் பேசியிருக்கிறார். சினிமா பார்த்து பலவீனப்பட்ட தலைமுறை என்று அவர்களை ஒதுக்கி வைக்காமல், இன்றைய தலைமுறையினரை உரையாடலுக்கு அழைத்திருக்கிறார். ‘பாம்பு பால் குடிக்கும்’ என்ற பொய்யான தகவலை தமிழ் சினிமா பல ஆண்டுகளாக கூறி வந்தது. இன்றும் அதை பார்த்து பலரது நம்பிக்கை அவ்வாறாகவே உள்ளது.
இந்த சிறு உதாரணத்தைப் போல பெரிய பெரிய அரசியலையும் தமிழ் சினிமா படைப்பாளிகள் கையாண்டு இருக்கிறார்கள். ஆக, சினிமா எனும் மக்கள் ஊடகத்தை கையில் ஏந்தும் போது, சமூகப் பொறுப்பு என்பது கலைஞர்களுக்கு நிச்சயம் வேண்டும். அப்படி இல்லையென்றால் சினிமாவில் மட்டும்தான் பாம்பு பால் குடிக்கும், நிஜவாழ்வில் அல்ல என்ற உண்மையைச் சொல்ல யாராவது வந்துவிடுவார்கள்!
இப்போது விடுதலை திரைப்படமும் வந்திருக்கிறது. “பாம்பு பால் குடிக்காது” என்பதைச் சொல்ல!