தன்னுடைய வலுவான இசையால் கேட்பவர்களின் உள்ளங்களைத் துள்ளவைக்கும் இசைக் கலைஞர் டிரம்ஸ் சிவமணியுடன் ஒரு நேர்காணல்…
நீங்களும் ரஹ்மானும் சேர்ந்து பணியாற்றிய படங்கள் ஏராளம். உங்களுக்கும் ரஹ்மானுக்கும் உள்ள முப்பது வருட நட்பைப் பற்றிப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு சிறந்த இசைக்கலைஞர். அவர் ஒரு பார்ன் ஜீனியஸ். அவரிடம் பிடித்த விஷயம் எதுவென்றால், சிவமணி என் நண்பர், அவரை நாற்பது வருடங்களாகத் தெரியும் என்பதற்காக எல்லாம் என்னை எல்லாப் படங்களிலும் பாடல்களிலும் பயன்படுத்த மாட்டார். அவருக்குத் தெரியும் நான் எப்பொழுது தேவை, என்னுடைய இசையை எங்கு பயன்படுத்த வேண்டும் என்று. பொன்னியின் செல்வனில், `பொன்னி நதி’ பாடலிலும் அப்படித்தான். அவரின் இசையில் `பத்து தல’ படத்தில் என் மகன் குமரனும் பணியாற்றினார். என் மகனும் அவர் படத்தில் ரெக்கார்டிங்கில் பணியாற்றியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.
உங்களுக்கும் இளையராஜாவுக்குமான தொடர்பைப் பற்றி சில வார்த்தைகள்…
ராஜா அண்ணனின் முக்கிய டிரம்மர் நான் இல்லை. இருப்பினும் அவர்தான் எனக்குக் கோடி சாமியாரை அறிமுகம் செய்து வைத்தார். அதை என் வாழ்நாளில் மறக்கமாட்டேன். அவர் புரவி பாளையத்தில் உள்ள ஜமீன் அரண்மனையில் வாழ்ந்த பெரிய சித்தர். அவரை முதன்முதலில் விடியற்காலையில் சந்தித்தேன். அடுத்த நாள் எனக்குச் சென்னையில் டி.ராஜேந்தரிடம் ரெக்கார்டிங் இருந்தது. ஆனால் இவர் என்னை, ’போக வேண்டாம், உனக்கு அங்கு வேலை இல்லை’ என்றார். ஆனால் நான் முக்கியமான பணி என்பதால் கிளம்பவேண்டும் என்றேன். ’சரி, மீண்டும் அமாவாசைக்கு வா’ என்றார். நான் சென்னைக்கு வந்து பார்த்த பொழுது ஸ்டூடியோ அடைக்கப்பட்டு இருந்தது. அப்போதுதான் புரிந்தது. அதிலிருந்து நான் ஒவ்வொரு பௌர்ணமி, அமாவாசை தினங்களில் அங்கு சென்று அவரைப் பார்ப்பதுண்டு. அதேபோல் வடபழனி பாபா உள்ளிட்ட மகான்களின் தொடர்பு இருந்துள்ளது. ஆன்மிகத் தேடல் எப்போதும் உண்டு.
உங்களுடைய வெற்றியைக் கண்டதும் குடும்பத்தினர் எவ்வாறு பாராட்டினர்?
முதலில் என் தந்தை நான் இந்தத் துறையில் வருவதை விரும்பவில்லை. வேறு ஏதாவது துறையில் ஈடுபடும்படி கூறினார். ஆனால் கடவுளின் சித்தம் இதுவாகவே இருந்தது. பின் அவரின் ஒவ்வொரு கச்சேரியிலும் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பின் ஐ.ஐ.டி-யில் நடந்த முக்கியமான விழாவில் நான் டிபிசி, வீணா காயத்ரி, கீபோர்டு முரளி உள்ளிட்டோருடன் வாசிக்கும் அனுபவம் கிடைத்தது. அதில் நான் சோலோ வாசிக்கும்பொழுது, கூட்டத்தில் இருந்தவர்கள் என் குருநாதரின் பெயரைச் சொல்லி என்னை உற்சாகப்படுத்தினார். அப்போது என் தந்தை மேடையில் என்னைக் கட்டிப்பிடித்துக்கொண்டார்.
அப்போது நான் அவரிடம் கூறினேன். நான் உங்களின் கனவை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறேன். என்னுடைய எல்லாப் புகழும் உங்களையே சேரும் என்றேன். அதுபோல் அவருடைய இறுதி நாள்களில் என்னுடன் பேச வேண்டும் என்று விரும்பினார். அப்போது இறுதியாக அவர் பேசியதை நான் பதிவு செய்து வைத்திருக்கிறேன். அதில், `என் மகனை நான் நிறைய அடித்திருக்கிறேன், துன்பப்படுத்தியிருக்கிறேன், இருப்பினும் அவன் நல்ல நிலையில் உள்ளது மகிழ்வாக உள்ளது’ என மிக உருக்கமாகப் பேசியிருப்பார். அதை இப்போதும் வைத்திருக்கிறேன்.
Billy Cobham-உடன் மேடையைப் பகிர்ந்துகொண்ட அனுபவம் பற்றிச் சில வார்த்தைகள்…
என்பதுகளில் ஒரு முறை நான் சுவிட்சர்லாந்துக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியனுடன் சென்றிருந்தேன். அப்போது ஜாகிர் ஹுசைனைத் தொடர்பு கொண்டு பில்லி கோபம் எங்கிருக்கிறார் என்று கேட்டுக்கொண்டேன். அதிர்ஷ்டவசமாக அவர் ஸுரிக்கில் இருந்தார். நானும் அதே இடத்தில் இருந்ததால் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரைச் சந்தித்தபோது பனியில் அவரின் காலில் விழுந்தேன். அவர் என்னை வெளியில் சுற்றிக் காட்டினார். அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. தொண்ணூறுகளில் அவர் பாம்பே வந்திருந்தார். அந்த விழாவில் நானும் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அல்லா ராகாப், ஜாகிர் ஹுசைன் விக்கு விநாயகம் உள்ளிட்டோருடன் வாசித்தது கனவு போல் இருந்தது. அவருடன் சேர்ந்து ஸ்விம்மிங் செய்தேன், அவருடன் பயணம் செய்து ஷாப்பிங் செய்தேன். அது ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது.
முக்கியமான கச்சேரிகளுக்கு நடுவே படமடி சந்தியா ராகம் படத்தில் நடிக்கவேண்டும் என்று எப்படித் தோன்றியது?
1985-ல் நாங்கள் அமெரிக்கா சென்றிருந்த சமயம். அப்போது ஒரு மாலைப்பொழுதில் நண்பர்கள் எல்லோரும் அமர்ந்து பேசும்போது, ஏன் ஒரு நல்ல தெலுங்குப் படம் இந்திய-அமெரிக்க கலாசாரத்தைத் தழுவி இயக்கக்கூடாது என்று தோன்றியது. யார் யாரெல்லாம் நடிப்பது என்றெல்லாம் முடிவு செய்தோம். அப்படித்தான் என்னையும் படத்தில் இணைத்துக்கொண்டேன். மிகவும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. ரொனால்டினோ என்ற கதாபாத்திரத்தில் நடித்தேன். என்னுடைய மேக்கப் பொறுப்பை ஏ.எம்.ரத்தினம் சார்தான் செய்தார். காலையிலேயே வந்துவிடுவார். முகத்தில் ஏதோ ஒரு எண்ணெய் போல் தேய்த்து சற்று கறுப்பான தோற்றம் வருவதற்காக என் மேல் ஷுபாலிஷைப் பயன்படுத்தினார். நான் அந்தக் கதாபாத்திரத்தை மிகவும் பிடித்து நடித்தேன்.
உங்களுக்காக SPB அவரே எழுதிப் பாடிய ராப் சாங் இடையில் வைரலானது; அவரைப் பற்றிச் சில அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்!
அவர்தான் என் வீட்டுக்கு விளக்கேற்றி வைத்த தெய்வம். அவர்தான் என் குரு. அவரிடம் நான் பலவற்றைக் கற்றுக்கொண்டேன். அவர் இன்றும் நம்முடன்தான் இருக்கிறார் என்று தோன்றுகிறது. தினமும் அவரைப் பற்றிப் பேசி, அவர் பாடல்கள் கேட்டு ஒரு முறையாவது அழுதுவிடுவேன். அவர் இறுதியாக என் பிறந்தநாளில் பேசி அனுப்பிய ஆடியோ இன்னும் என்னிடம் உள்ளது. அதை அடிக்கடி கேட்டுக்கொள்வேன்.
உங்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. நீங்கள் வாசிக்க வந்தாலே ஒரு தனி எனர்ஜி ரசிகர்கள் மத்தியில் எழுகிறது. ரசிகர்களை உங்கள் இசையால் எப்படிக் கட்டுப்படுத்துகிறீர்கள்?
ரசிகர்களுடன் கனெக்ட் ஆக வேண்டும் என்றால் நாம் முதலில் அவர்களுடன் பேசக் கூடாது. அவர்களை நம்மை நோக்கி இழுக்க வேண்டும். நாம் அவர்களை நோக்கிச் செல்லக்கூடாது. அவர்கள் ஆரவாரம் செய்யும்பொழுதும் நாம் தனியாக வாசித்தால், அவர்கள் அதைக் கவனிப்பார்கள். நடுவில் ஒரு புள்ளியில் நான் அவர்களுடன் கனெக்ட் ஆவேன். அதன்பின்னால் வாசிப்பதற்கு ஏற்றாற்போல் அவர்களும் அதை ரசிப்பார்கள்.
வீட்டில் உங்களுக்குப் பிடித்த இடம் சமையலறை என்று அறிந்தோம்… இது எதனால்?
இதற்கு என் அம்மாவிற்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும். அங்கு பாத்திரங்கள் அதிகமாக இருக்கும். அதனால் எனக்கு சமையலறை மீது தனிப் பிரியம். அங்குதான் நான் இசையை அதிகமாக உணர்ந்தேன். எந்த மாதிரியான உலோகத்தில் எந்த மாதிரியான சத்தம் வரும் என்பதை அங்கிருந்துதான் அறிந்துகொண்டேன்.