சென்னை : சட்டப்பேரவையில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. “இவருக்கு இதே வாடிக்கையா போச்சு. எங்களை குற்றம்சாட்டி பேசுவதுதான் இவருக்கு வேலையா” என்று கோபமாகப் பேசினார் எடப்பாடி பழனிசாமி.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கொரோனா பரவல் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தின் மீது சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை பேசும்போது, கடந்த அதிமுக ஆட்சி மீது குற்றம்சாட்டிப் பேசினார். அதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
அப்போது சபாநாயகர் அவரை அமரவைக்க முயன்றதால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதிமுக எம்.எல்.ஏ.க்களும் செல்வப்பெருந்தகை பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே சபாநாயகர் அப்பாவு, செல்வப்பெருந்தகை பேசிய ஆட்சேபகரமான வார்த்தைகளை அவைக் குறிப்பில் இருந்து நீக்கினார்.
தொடர்ந்து செல்வப்பெருந்தகை மீண்டும் சில வார்த்தைகளைப் பேச முயன்றார். அப்போது எடப்பாடி பழனிசாமி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, “இவருக்கு இதே வாடிக்கையாகி போச்சு. எங்களை குற்றம்சாட்டி பேசுவதுதான் இவருக்கு வேலையா?” என்று கோபமாகப் பேசினார்.
அதிமுக – காங்கிரஸ் உறுப்பினர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், மூத்த அமைச்சர் துரைமுருகன் குறுக்கிட்டு, இந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதன் பின்னரே சட்டப்பேரவையில் கூச்சல் குழப்பம் முடிவுக்கு வந்தது.