தென்னிந்தியாவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கர்நாடகா சட்டமன்ற தேர்தல் வரும் மே 10ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் வெற்றி பெற வேண்டும் என ஆளும் பாஜக தீவிரம் காட்டி கொண்டிருக்கிறது. ஆனால் சமீபத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள்
காங்கிரஸ்
கட்சிக்கு சாதகமாக இருப்பதாக தெரிவிக்கின்றன. இதற்கிடையில் கிங் மேக்கராக ஆதிக்கம் செலுத்த மதச்சார்பற்ற ஜனதா தளம் வியூகம் வகுத்துள்ளது.
கர்நாடக சட்டமன்ற தேர்தல்
இதனால் கர்நாடக தேர்தல் களம் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. இங்கு பெறும் வெற்றி அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலுக்கு முன்னோட்டமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக கர்நாடகாவில் பெரிதும் எதிரொலிக்கும். இதில் மற்றொரு சீக்ரெட்டும் இருப்பதாக சவுக்கு சங்கர் குறிப்பிட்டுள்ளார்.
பாஜக வெற்றி
இவர் ’சமயம் தமிழ்’ யூ-டியூப் தளத்திற்கு பிரத்யேகமாக அளித்த பேட்டியில், கர்நாடக மாநிலத்தில் பாஜக வெற்றி பெற்று விட்டால் தமிழகத்தில் அதன் மவுசு கூடும். இதைப் பயன்படுத்தி வரும் 2024 மக்களவை தேர்தலை ஒட்டி அதிமுக பொதுச் செயலாளர்
எடப்பாடி பழனிசாமி
உடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவர். அப்போது கூடுதல் தொகுதிகளை கேட்பர்.
கூட்டணியில் மோதல்
அதுமட்டுமின்றி பாஜக தலைமையை ஏற்கும் கட்சி உடன் மட்டும் தான் கூட்டணி என மாநிலத் தலைவர் அண்ணாமலை அதிரடியாக பேசவும் வாய்ப்புள்ளது. இது அதிமுக – பாஜக இடையிலான வார்த்தை போராக வெடிக்கக் கூடும். அடுத்ததாக தொகுதி பங்கீட்டில் இழுபறியை ஏற்படுத்தும். கடைசியில் அதிக தொகுதிகளை ஒதுக்க வேண்டிய கட்டாயத்திற்கு அதிமுக ஆளாகும்.
தொகுதி பங்கீடு
கடந்த 2019 மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக 20, பாமக 7, பாஜக 5, தேமுதிக 4, புதிய தமிழகம் 1, தமாகா 1, புதிய நீதி கட்சி 1 என போட்டியிட்டன. இந்நிலையில் வரும் 2024 தேர்தலில் கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகள் மட்டுமின்றி தொகுதி பங்கீட்டிலும் மாற்றம் வரும்.
எடப்பாடியின் கணக்கு
எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் அதிமுகவின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள நிலையில், தனது தலைமையில் கட்சியின் வெற்றி வாய்ப்பை உறுதி செய்ய திட்டமிட்டுள்ளார். திமுகவிற்கு எதிராக பெரிய சவாலாக விளங்க வேண்டும் என்று விரும்புகிறார். அதற்கு அதிகப்படியான தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டியுள்ளது.
தேர்தல் முடிவுகள்
இத்தகைய நெருக்கடிக்கு மத்தியில் பாஜக கூடுதல் இடங்களை கேட்டால் அது தலைவலியாக மாறும் என்பதில் சந்தேகமில்லை. இதற்கான ஆரம்பப் புள்ளியாக கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இருக்கும். அதுவே கர்நாடகாவில் பாஜக ஆட்சியை இழந்தால் நிலைமை தலைகீழாக மாறிவிடும். அதிமுக தலைமையை ஏற்று அக்கட்சி கொடுக்கும் தொகுதிகளை பாஜக தட்டாமல் வாங்கிக் கொள்ளும் என சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.