தமிழக சட்டசபையில் இன்று விளையாட்டுத் துறைக்கான மானிய கோரிக்கை விவாதம் நடந்தது. அப்போது, பேசிய
சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
அதுகுறித்து பேசியவர், இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎஸ் போட்டி தமிழக இளைஞர்களால் அதிகம் ஈர்க்கப்பட்டுள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் என்ற தமிழகத்தை சேர்ந்த அணியில் தமிழக வீரர்களே இல்லை. தமிழகத்தில் திறமையான வீரர்கள் இருந்தாலும் சிஎஸ்கே அணியில் ஒரு தமிழக வீரர்கூட தேர்வு செய்யப்படவில்லை. ஆனால், தமிழகத்தை சேர்ந்த அணி என்று விளம்பரம் செய்து பெருத்த லாபம் அடைந்து வருகிறது.
எனவே, தமிழர்களே இல்லாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தடை செய்ய வேண்டும் என சட்டப்பேரவையில் பாமக எல்எல்ஏ வெங்கடேஸ்வரன் கூறி அமர்ந்தார். இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இதற்கு அப்படியே நேர்மாறாக வைத்த கோரிக்கை பேசுபொருளாகியுள்ளது.
தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் எஸ்.பி. வேலுமணி வைத்த கோரிக்கையில், அதிமுக ஆட்சியின்போது ஐபிஎல் போட்டிகளை காண எம்எல்ஏ-க்களுக்கு பாஸ்கள் வழங்கப்பட்டன. இந்த முறை 300 சிறப்பு பாஸ்கள் வழங்கப்பட்டன. ஆனால், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு பாஸ் கூட இன்னும் வரவில்லை. அதற்கு அமைச்சர் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று எஸ்.பி. வேலுமணி கோரிக்கை வைத்தார்.
சென்னை சேப்பாக்கத்தில் வரும் 12ம் தேதி நடக்கும் CSK-RR அணிகள் மோதுகின்றன. இதற்கான டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் சொற்ப அளவில் ஒதுக்கப்பட்டு தனியார் நிறுவனங்களுக்கு பெருமளவு டிக்கெட்டுகளை ஒதுக்கி அவற்றை கள்ள சந்தையில் 2 அல்லது 3 மடங்கு அதிக விலைக்கு விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில், சட்டசபையில் இதுகுறித்து கவனத்தை ஈர்க்காமல் எதிர்க்கட்சி உறுப்பினர் எஸ்பி வேலுமணி ஐபிஎல் டிக்கெட் கேட்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.