சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் இன்று விசாரிக்க இருக்கிறது. நாளை புருசந்திராகுமர் கவ்ரவ் அமர்வு முன் இந்த வழக்கு விசாரிக்கப்பட உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் நாளை விசாரிக்க இருக்கிறது. நாளை புருசந்திராகுமர் கவ்ரவ் அமர்வு முன் இந்த வழக்கு விசாரிக்கப்பட உள்ளது. இதில் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்தால் அதிமுக பொதுச்செயலாளர் என்ற பதவி அவருக்கு உறுதியாகிவிடும்.
கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி – ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் இடையிலான ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமாக வெடித்தது. அதை தொடர்ந்து ஓபிஎஸ் தரப்பின் பல்வேறு தடைகளுக்கு மத்தியில் கடந்த ஜூலை 11 ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டு எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டார்.
அதன் தொடர்ச்சியாக ஓபிஎஸ் அணியால் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு தடை விதித்தது. இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், அவருக்கு சாதகமாக தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி எடப்பாடி தரப்பு கூட்டிய பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பை வழங்கியது. இதனால் ஊக்கம் பெற்ற எடப்பாடி பழனிசாமி தரப்பு உடனடியாக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த முடிவு செய்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிசாமி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டு நிரந்தர பொதுச்செயலாளராகவும் பதவியேற்றார்.
இதற்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் தொடர்ந்து பல்வேறு சட்ட முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், தேர்தல் ஆணையம் தன்னை பொதுச்செயலாளராக அறிவிக்க உத்தரவிடக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட டெல்லி உயர்நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது. இந்த வழக்கை நீதிபதி புருசந்திராகுமர் கவ்ரவ் அமர்வு விசாரிக்கிறது.