புதுடில்லி: ‘கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருவதற்கு நான்காவது அலை
காரணமல்ல. உருமாறிய ஒமைக்ரான் வகை தொற்றால் ஏற்பட்ட மூன்றாவது அலையின்
பாதிப்பே தற்போதும் தொடர்கிறது. எனவே மக்கள் அச்சப்பட தேவையில்லை. தொற்று
பாதிப்பு ஏற்பட்டாலும் 4 – 5 நாட்களில் குணமாகிவிடும்’ என, மத்திய அரசு
தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க துவங்கியதை அடுத்து, நாடு முழுதும் புதிதாக 5,676 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதன் வாயிலாக தொற்று பாதிப்பு எண்ணிக்கை 37 ஆயிரத்து 93 ஆக உள்ளது. உயிரிழப்பு 21 ஆக பதிவாகி உள்ளது.
உருமாறிய ஒமைக்ரான் வகையின் துணை வகைகள் காரணமாக, நான்காவது அலை உருவாகி இருப்பதாக மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது.
தொற்று தடுப்பு நடவடிக்கையை பின்பற்றும்படி அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில், தற்போதைய தொற்று பரவல் நிலவரம் குறித்து, நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் கொரோனா பணிக்குழு தலைவர் டாக்டர் என்.கே.அரோரா நேற்று கூறியதாவது:
தற்போது கண்டறியப்படும் கொரோனா தொற்று பாதிப்பு மிதமானதாகவே உள்ளன. பாதிக்கப்படுவோர் 4 – 5 நாட்களில் குணம் அடைகின்றனர். தீவிர பாதிப்புகள் ஏற்படவில்லை.
மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய தேவையும், உயிரிழப்புகளும் குறைவாகவே உள்ளன. தொற்று பரவல் திடீரென அதிகரித்ததற்கு நான்காவது அலை காரணம் அல்ல.
உருமாறிய ஒமைக்ரான் வகை தொற்றால் ஏற்பட்ட மூன்றாவது அலையின் தொடர்ச்சியாகவே இது கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 15 மாதங்களில், கொரோனா வைரசில் 450 உருமாற்றங்கள் நிகழ்ந்து உள்ளன. ஒமைக்ரான் வகையின் துணை பிரிவான எக்ஸ்.பி.பி.1.16 வகையால் தான் தொற்றுப் பரவல் தற்போது திடீரென உயர்ந்துள்ளது.
இந்த வகை வைரஸ் தீவிரமாக பரவும் தன்மை உடையது என்பதால் வேகமாக பரவுகிறது.
இந்த நிலைமை இன்னும் சில நாட்களுக்கு தொடரும். ஆனால், மக்கள் அச்சப்பட தேவையில்லை. மத்திய அரசு, நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருகிறது.
முதியோர் மற்றும் இணை நோய்கள் உள்ளோருக்கு தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய தேவை உள்ளது.
நாட்டில், 27 – 28 சதவீதம் பேர் மட்டுமே, ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி போட்டுள்ளனர். முதியோர் உடனடியாக பூஸ்டர் டோஸ் போட்டுக் கொள்ள வேண்டும்.
கொரோனா தொற்று பரவத்துவங்கிய மூன்று ஆண்டுகளில் குழந்தைகள் பெரிதாக பாதிக்கப்படவில்லை. தற்போது குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் தாக்கம் மிக லேசானதாகவே உள்ளது. சிலருக்கு அறிகுறிகள் கூட இருப்பதில்லை.
குழந்தைகளில், 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு ‘கோவோவாக்ஸ், சைகோவ்டி, கார்பிவாக்ஸ், கோவாக்சின்’ தடுப்பூசிகள் உள்ளன.
தற்போது வரை, 12 – 18 வயது வரையிலான 90 சதவீத குழந்தைகள் தடுப்பூசி போட்டுள்ளனர். 12 வயதுக்கு குறைவானவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி இன்னும் துவங்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.